Friday, July 27, 2007

Born Into Brothels - English / Hindi

Born Into Brothels - English / Hindi

விளக்கைச் சுற்றும் விட்டில் பூச்சிகளுடன் முதல் ஷாட் ஆரம்பிக்கிறது. அடர்ந்த சிவப்பு வண்ணத்தில் தொடர்ந்த காட்சிகள் விரிகின்றன. பாலியியல் தொழிலாளி ஒருவரின் பார்வையில் ஒரு குறுகலான சந்து. காத்திருக்கிறார்கள் வாடிக்கையாளர்களுக்காக. தங்களால் இயன்ற அளவிற்கு அழகு படுத்திக் கொண்டு. புன்னகைக்கிறார்கள். சட்டையைப் பிடித்து இழுக்கிறார்கள். மதுபானங்கள் விளம்புகிறார்கள். பணம் எண்ணப்படுகிறது. வயதான பெண்கள் கஞ்சா புகைக்கிறார்கள். போதையில் ஆண்கள். தெருவில் உழலும் குழந்தைகள். இறுதியில் குப்பைத் தொட்டியில் பெருச்சாளிகள்.Born Into Brothels.
சோனாகச்சி என்ற கல்கத்தாவின் பிரபலமான பாலியியல் தொழிற்பேட்டையின் வீதி ஒன்றில் தான் மேலே காட்டப்பட்ட காட்சிகள். பாலியியல் தொழிற்பேட்டையின் வாழ்க்கையைப் படம் பிடிக்க விரும்பி வந்த பிரிட்டிஷ் பெண் ஸனா பிரிஸ்கி என்ற பத்திரிக்கையாளர். சோனா கச்சியின் இறுக்கமான கட்டமைப்பைப் பிளந்து, ஊடுருவி எதையும் காண முடியவில்லை. அது ஒரு தனி உலகம். ஒரு பெரு வட்டத்திற்குள் இயங்கும் சிறுவட்டம். பெருவட்டத்திற்குள் இருப்பது அதற்கு அவசியம். ஆனால், அதனுடன் கலந்து விடுவதற்கு வழியில்லை. வெளியிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. அதிலும் ‘அந்த சில மணித்துளிகளுக்கு’ மட்டுமே. எதையுமே புகைப்படம் எடுக்க முடியாது.

இந்தத் தெருவில் தங்கிக் கொண்டு, பாலியியல் தொழிலாளர்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்ய இயலாத, ஸனா, மாறாக, அந்தத் தெருவில், பாலியியல் தொழிலாளிகளின் குழந்தைகளுடன் நெருங்கிப் பழகுகிறார். அந்தக் குழந்தைகளுக்கு எதுவும் புரியவில்லை. யாரிந்தப் பெண், எதற்காக வந்திருக்கிறார் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனாலும், ஒட்டிக் கொள்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு ஒரு புகைப்படக் கருவியின் வழியாக எப்படிப் பார்ப்பது, காட்சிகளை எப்படி தேர்வு செய்வது என்பது போன்ற புகைப்படக் கலையின் அடிப்படைகளைக் கற்றுத் தர ஆரம்பிக்கிறார். ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகைப் படம் எடுத்துக் கொள்வதுவும், பின்னர் அதை எவ்வாறு சரியாகச் செய்திருக்கிறார்கள் அல்லது என்ன தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன என்று விமர்சிப்பதுவும், தவறுகளை திருத்திக் கொள்வது எவ்வாறு என கற்றுத் தருகிறார். பின்னர் ஒவ்வொருவருக்கும் ஒரு புகைப்பட கருவியைத் தருகிறார்.

காட்சிகளாகத் தகும் அனைத்தையும் புகைப்படம் எடுக்கத் தூண்டுகிறார். ஒரு புகைப்படவியலாளராக, பத்திரிக்கையாளாராக உள்ளே நுழைய முடியாத அவருக்கு, இந்தக் குழந்தைகள் வழி அமைத்துத் தருகிறார்கள். பாலியியல் தொழிலாளர்களுக்கும் நம்பிக்கைப் பிறக்கிறது. அவரை முதலில் தயக்கத்துடனும், பின்னர் தாராளமாகவும் அனுமதிக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது வாழ்க்கை பதிவு பெறுகிறது. அந்த குழந்தைகளே சோனாகச்சியின் வாழ்க்கை அனுபவங்களைப் பிட்டு பிட்டு வைக்கிறார்கள். தங்கள் வீட்டில் எவ்வாறு தொழில் நடக்கிறது என்பது முதற்கொண்டு.

தான் வந்த நோக்கத்திலிருந்து, பாலியியல் தொழிலாளர்களைப் பற்றிய பதிவை விட, அந்தக் குழந்தைகளின் மீதான பரிவாக பதிவு செய்வதில் கவனம் கொள்கிறார், ஸனா. புகைப்பட வகுப்புகள் மெருகேறிக் கொண்டிருக்கின்றன. நிறையப் புகைப்படம் எடுத்துத் தள்ளுகிறார்கள். வெவ்வேறு கோணங்களில் சோனாகச்சி வாழ்க்கை பதிவாகிறது. அந்த வாழ்க்கையைப் பற்றி வயதுக்கு வந்த பாலியியல் தொழிலாளர்கள் சொல்லவில்லை. மாறாக அந்தக் குழந்தைகள் சொல்கிறார்கள். உடைக்க முடியாத இரும்புக் கோட்டையாக மர்மமான பிரதேசமாக விளங்கிய அந்த சோனாகச்சி என்ற கோட்டையை இளக்கி, தன்னை அதனுள் அனுமதிக்க வழி வகுத்த அந்தக் குழந்தைகளுக்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற ஆவல் இறுதியாக எடுத்த வடிவம் தான் - Born Into the Brothels என்ற டாக்குமெண்டரி.


தங்களைச் சுற்றி இருக்கும் உலகைப் பற்றி எதார்த்தமாக பேசும் குழந்தைகள், அத்துடன் தங்கள் ஆசைகளையும், வாழ்க்கையைப் பற்றிய தங்கள் புரிதலையும் கூடவே பேசுகிறார்கள். பெண் குழந்தையை விற்க முயன்ற தந்தை, விரைவிலேயே பாலியியல் தொழிலாளியாக மாற்றப்பட போகும் சிறுமி என அந்தக் குழந்தைகளைச் சுற்றி ஒரு படுகுழி தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைந்து ஏதாவது செய்தாக வேண்டும். கோச்சி என்ற குழந்தையை பள்ளிவிடுதியில் சேர்ப்பதில் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் புகுந்து கொள்கிறார். இடையில், இந்தியா ஆளும் வர்க்கத்தின் சிறப்பு மிக்க ‘சிவப்பு நாடாக்களையும்’ சந்திக்கிறார். இவர்களின் வாழ்க்கையைப் பலருக்கும் எடுத்துச் சொல்லி, இந்த டாக்குமெண்டரிப் படங்களையும் திரையிட்டு, வசூல் திரட்டுகிறார். இந்தக் குழந்தைகள் எடுத்த புகைப்படங்களையும் தொகுத்து வணிக ரீதியாக பணம் திரட்ட முனைகிறார்.
இன்று அந்தக் குழந்தைகளில் சிலர் நல்ல நிலைக்கு வந்து விட்டனர். சிலர் புகைப்படக் கலைஞராகவே. ஆனால், எல்லோருக்கும் அந்த அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை. சிலரால், சோனகச்சியின் வாழ்வெல்லைகளை விட்டு, வெளியேற முடியவில்லை.
பாலியியல் தொழிலாளிகளின் வாழ்க்கைப் பதிவு என்று தொடங்கி, இத்தகைய இடங்களில் பிறந்து விடக்கூடிய குழந்தைகளின் அவல் நிலையைக் காட்டி, பின்னர் அவர்கள் வாழ்வின் ஈடேற்றத்திற்கான முயற்சி என்று பலதரப்பட்ட பாதைகளில் இந்த டாக்குமெண்டரி பயணித்தாலும், படத்தின் பின்னணி களம் பாலியியல் தொழிலாளிகளும் அவர்களது வாழ்க்கை சூழலும் எத்தகைய அவலமானது என்று சுட்டிக் காட்டுகிறது. தனி மனிதர்களின் முயற்சியினால் மட்டுமே திருத்திவிட முடிகின்ற சூழ்நிலை இல்லை. அரசின் முயற்சிகளும், உதவியும் கண்டிப்பாகத் தேவைப்படுகின்ற விஷயம் இது. ஆனால், இந்திய அரசுகள் இது குறித்து எதுவும் செய்ததாக தெரியவில்லை. வெறுமனே எய்ட்ஸ் தடுப்பு பிரச்சாரங்கள் மட்டுமே உதவப் போவதில்லை. பாலியியல் தொழில், அரசினால் அங்கீகரிக்கப்பட்டு, ஒரு தொழிலாக நடத்தப்படுவதற்குண்டான விதிமுறைகளை ஏற்படுத்தித் தந்தால் மட்டுமே, இங்கு நிலவும் சூழலை சரி செய்ய முடியும். இல்லையென்றால், சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில், இவர்களுக்குப் பாதுகாப்பாக நிற்க முனைபவர்கள் சட்ட விரோதிகளும், சுரண்டல் பேர்வழிகளுமாகத் தான் இருப்பார்கள். படத்தின் பல இடங்களில் இந்தப் பின்னணி நிழலாடுகிறது.


சில மாதங்களுக்கு முன் கல்கத்தாவின் பாலியியல் தொழிலாளிகள், தாங்கள் வருமான வரி கட்டுகிறோம் என்று அறிவித்த பொழுது, அதை மேற்கு வங்க அரசு ஏற்கவில்லை. அத்தனை தான் கம்யூனிஸ வாதிகளின் முற்போக்குத் தனம். அல்லது இந்தியாவின் ஆளும் வர்க்கத்தினரின் மனப்பாவம். இதற்கு முன்னர் கூட, மீரா நாயரின் ‘ஸலாம் பாம்பே’ என்ற திரைப்படம் ஒன்று வந்தது. சிவப்புப் பகுதியில் ‘சாயா’ எடுத்துச் செல்லும் அப்பாவி சிறுவர்களின் பின்புலத்தை வைத்து இயக்கப்பட்ட படம். அப்பொழுது, மிகத் தீவிரமாகப் பேசப்பட்ட படம். தொடர்ந்து மறக்கப்பட்டது. இப்பொழுது, இந்த டாக்குமெண்டரி. வந்த பொழுது, சிறிது பேசப்பட்டதாக நினைவு. இப்பொழுது எத்தனை பேருக்கு அது ஞாபகத்தில் இருக்கும் என்று தெரியவில்லை.
ஆனால், அவ்வப்பொழுது, யாராவது தொடர்ந்து இவ்வாறு குட்டிக் கொண்டிருந்தாலாவது கொஞ்சம் விழிப்புணர்ச்சி வருகிறதா எனப் பார்க்கலாம்.
அரசிற்கு.

Tuesday, July 10, 2007

Monsieur Ibrahim -French

Monsieur Ibrahim and the flowers of Qur'an

என்ற படத்தின் கதையை ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால் - மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட, அனைத்து தடைகளையும் மீறி, அன்பும் உறவும் உண்டாக முடியும் என்பது தான். இந்த ஒற்றை வரியைக் கொண்டு ஒரு முழு கதையையும் பின்னியிருக்கிறார்கள். வயதான பெரியவருக்கும், ஒரு சிறுவனுக்குமிடையில் எழும் நட்பையும், விளையும் உறவுகளையும் நகைச்சுவை இழையோட, யதார்த்தமாக பேசும் இந்தப்படம் வெனீஸ் பட விழாவில், பார்வையாளர் விருது பெற்றதில் ஆச்சரியமில்லை.

படத்தின் இரு முக்கிய பாத்திரங்களுமே முரண்களின் மீது அமைக்கப்பட்டிருக்கிறது. எப்பொழுதுமே இரு முரண்களுக்கிடையில் நிகழும் உறவுகள் எல்லோரையும் ஈர்ப்பதில் எளிதாக வெற்றியடையும். இந்தப் படத்திலும் அந்த உத்தியைத் தான் கையாண்டிருக்கிறார்கள்.

மோஸஸ் என்ற சிறுவன், இப்ராஹிம் என்ற முஸ்லிம் பெரியவர் இருவருமே உறவினர்கள் அல்ல. அத்துடன், பொதுப்புத்தியில், இருவரும் இரு வேறு துருவங்களைச் சார்ந்தவர்கள். பெரியவர் முஸ்லிம். சிறுவன் யூதன். யூத முஸ்லிம் முரண்களைச் சொல்லித் தெரிவதில்லை. ஆனால், படம் யூத முஸ்லிம் முரண்பாடுகளைப் பற்றிப் பேசவில்லை. இன்னமும் சொல்லப்போனால், இரு பாத்திரங்களுமே தங்களை மதம் சார்ந்து வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் மதங்களைப்பற்றிய கேள்விகள் எழுப்பப்படுகின்றன. படத்தின் இயக்குநர் சொல்வது, பெரியவர், சிறுவன் என்பது தான் கதை கட்டமைப்பே தவிர, யூத முஸ்லிம் பெயர்கள் இயல்பாக நிகழ்ந்ததாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். They just happened to be Jew and Muslim.இரண்டாவது முரணாக அமைவது - பாத்திரங்களின் குணங்கள். எல்லோரையும் நேசிக்கும் இயல்பை அனுபவத்தின் மூலம் பெறுகிறார் முஸ்லிம் பெரியவர். எதையும் நிராசையுடனும், அவநம்பிக்கையுடனும் நோக்கும் சிறுவனிடத்தில் எப்பொழுதும் ஒரு கோபம் மிளிர்கிறது. மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் தந்தை, பிரிந்து சென்ற தாய், உன்னை விட உன் சகோதரன் புத்திசாலி என்று குத்திக் கொண்டேயிருக்கும் தந்தையின் சுடுசொற்கள், தன் அன்பை - காதலை நிராகரிக்கும் சக யூத சிறுமி என வாழ்க்கையின் அனைத்து திசைகளிலும் ஏமாற்றத்தையே சந்திக்கும் சிறுவன், இயல்பாக எல்லாவற்றின் மீதும் வெறுப்பு கொள்கிறான். முஸ்லிம் தாத்தாவோ நேர் எதிர். வானொலி கேட்டு நேரம் கடத்துவது, தெரு விபச்சாரிகளை ஒரு கண்சிமிட்டலோடு ரசிப்பது, கடைக்குள் எதேச்சையாகப் புகுந்து நீர் கேட்கும் சினிமா நடிகையைக் கண்டு, பரவச பதட்டமடைவது, தனக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருப்பது, ஏழ்மையினால் திருடும் சிறுவனைக் கண்டு கொள்ளாமல் இருப்பது, பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அந்த சிறுவனிடத்தில், 'திருடுவதாக இருந்தால், என்னுடைய கடையிலே நீ திருடிக் கொள்' என்று தட்டிக் கொடுப்பது என பாசமிக்க மனிதராக பெரியவர் இருக்கிறார்.

இவர்கள் இருவருக்குமிடையில், உறவு வளர அல்லது பகைமை துளிர் விட பல காரணங்கள் இருந்திருக்கலாம். முஸ்லிம் பெரியவரை அரபி என நினைத்துக் கொண்டு, அவரிடத்தில் திருடுவது ஒன்றும் தவறில்லை என்று சிறுவனின் வெறுப்பு வெளிப்படுகிறது. சிறுவனை யூதனாக கண்டிருந்தால், அவனைத் தண்டிக்க முஸ்லிம் பெரியவர் முயற்சித்திருந்தால், அதை யாரும் குறை கூற முடியாது. ஆனால், பொறுமையாக சிறுவனுக்குப் புரிய வைக்கிறார். தான் ஒரு முஸ்லிம். எல்லா முஸ்லிம்களும் அரபிகளல்ல என்று. உறவு வளர அடிப்படையான காரணமாக, இருவருமே தாங்கள் தங்கி இருக்கும் நாட்டிற்கு அந்நியர் என்பதுவும், இருவருமே ஒரு வகையில் அநாதை வாழ்க்கையைத் தான் வாழ்கிறோம் என்ற புரிதலும் அமைகின்றன.

கதை வெகு எளிதானது. விபச்சாரிகள் நடமாடும் தெருவில், கடை வைத்திருக்கும் முஸ்லிம் பெரியவரின் கடையின் வாடிக்கையாளர் சிறுவன். தாய் பிரிந்து போன பின், கடைக்குச் சென்று வருவது அவனது பணி. அத்துடன் சமையலும். படிப்பிற்கு நேரமில்லை. அவனுடைய பிறந்த நாளைக் கூட மறந்து விடும் அவனது தந்தை எப்போழுதும் மன அழுத்தத்தில் உழல்பவர். அவனது சகோதரனை சிலாகித்தும், இவனை மட்டம் தட்டியும் பேசிக் கொண்டே இருப்பவர். அலுவலகம் விட்டு வந்ததும், மகன் சமைத்து வைத்திருப்பதை உண்டு விட்டு, இருக்கையில் முடங்கிக் கொண்டு எதையாவது படித்து நேரத்தைப் போக்கிக் கொண்டிருப்பவர். ஒரு கட்டத்தில், வேலையை இழந்து விட்டு, கொஞ்சம் பணத்தையும், உதவக் கூடிய நபர்கள் என்று ஒரு சில தொலைபேசி எண்களையும் எழுதி வைத்து விட்டு, வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்.

சிறுவன், கடையின் உரிமையாளரான, பெரியவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குகிறான். அவருடைய வாழ்க்கையைக் குறித்த யதார்த்தமான அணுகுமுறை அவனை வெகுவாக ஈர்க்கிறது. தந்தை ஓடிய பின், ஒரு புதுவித சுதந்திரத்தை அனுபவிக்கும் அவன் தந்தை சேமித்து வைத்த புத்தகங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விற்று பணம் சம்பாதிக்கிறான். தெரு விபச்சாரிகளிடம் அந்த பணத்தைக் கொண்டு போய் வருகிறான். தான் வளர்ந்து விட்டோம் என்ற கனவை வளர்த்துக் கொள்ளத் தான் இந்த வேலை. இதற்குள் ஓடிப்போன தந்தை, ரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார். இப்பொழுது அவன் உண்மையிலேயே அநாதையாகி விடுகிறான். பிரிந்து சென்ற தாய் வருகிறாள். சுவர்களுக்கு 'பெயிண்ட்' அடிக்கும் வேலை செய்து கொண்டிருந்த அவன், தாயிடமே பொய் சொல்கிறான். மோஸஸ் தன் சகோதரன் பாலைத் (Paulie) தேடி எங்கோ போய்விட்டான் என்று. தன் பெயர் மோமோ என்கிறான். இந்தப் பெயர் பெரியவர் வைத்தது. முகமது என்ற பெயரின் மரூஉ தான் மோமோ. தனக்கு மோஸஸ் என்ற ஒரு பையன் தான் என்று கூறிவிட்டுப் போய்விடுகிறாள் தாய். தன் தந்தை தன்னை இல்லாத ஒருவனைக் கொண்டு மட்டம் தட்டியிருக்கிறார் இத்தனை நாட்களும் என்ற அறிதலில் இன்னமும் கோபம் அதிகமாகிறது. தன்னை நேசிப்பதை விட, வெறுக்க பல காரணங்கள் இருந்தும் அதையெல்லாம் விட்டு விட்டு, தன்னை ஒரு மனிதனாக மதித்து நடத்தும் அந்தப் பெரியவரின் மீதான மதிப்பு பல மடங்கு உயர்கிறது. தன்னைத் தத்து எடுத்து கொள்கிறாயா என்று பெரியவரிடம் கேட்க, அதற்கென்ன? உனக்கு விருப்பமென்றால், நாளையே தத்து எடுத்துக் கொள்கிறேன் என கூறி மறுநாள் அதிகாரபூர்வமாக தத்து எடுத்துக் கொள்கிறார். உன் மனைவி ஆட்சேபிக்க மாட்டாளா என கேட்க, கண்டிப்பாக இல்லை, நீ அவளை சந்திக்க விரும்புகிறாயா என கேட்கிறார். சிறுவன் ஆம் என சொல்ல, உடனே பயணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். எப்படி? ஒரு புது வண்டி வாங்கி, அதை ஓட்டக் கற்றுக் கொண்டு.யூரோப் வழியாக பயணம் போகிறார்கள். வழியில் ஒவ்வொரு ஊரைப் பற்றியும் விளக்கிக் கொண்டே வருகிறார். புராதண இடங்களுக்குப் போகிறார்கள். தேவாலயத்திற்குப் போகிறார்கள். மசூதிக்குப் போகிறார்கள். சூஃபிக்கள் தங்களை மறந்து ஆடும் வழிபாட்டுக் கூடத்திற்குப் போகிறார்கள். துருக்கியை அடைகிறார்கள். ஏழ்மையிலும் அந்த மக்கள் உற்சாகமாக வாழ்வதைப் பார்க்கிறான். தெருக் கடையில் தேநீர் அருந்துகிறார்கள். தெருவில் நடனமாடும் இளைஞர்களுடன் சேர்ந்து ஆடுகிறான். எல்லா மனிதர்களும் நேசத்திற்குரியவர்கள் என உணர்கிறான். ஏழ்மை மகிழ்ச்சிக்கு குறுக்கே நிற்பதில்லை என புரிகிறது. தன் மனதில் மண்டிக்கிடந்த வெறுப்புகள் எல்லாம் மறைய, புதியவனாக உணர்கிறான். பின்னர் துருக்கியின் பாலைவனங்களில் பயணிக்கிறார்கள். பெரியவரின் ஊர் அருகே வந்ததும், அவனை கொஞ்சம் காத்திருக்குமாறு சொல்கிறார். பலபல வருடங்களாக ஊருக்கே வந்திராத அவர், ஊரின் நிலைமை என்னவென்று தெரிந்து கொண்டு திருப்பி வந்து அழைத்துக் கொள்கிறேன் என்கிறார். மோஸஸ் ஊருக்கு வெளியே தெருவில் நிற்கிறான். கிராமத்து சிறுவர்கள் அவனிடம் பேசுகிறார்கள். மொழி புரியவில்லை. என்றாலும் கையில் இருக்கும் புகைப்படக் கருவியைக் காட்டி காட்டிப் பேசுகிறார்கள். அவன் அவர்களைப் புகைப்படமெடுக்கிறான். அவன் அவர்களிடத்தில் வீட்டுக்குப் போகுமாறு சொல்லி விட்டு, வாகனம் சென்ற பாதையில் நடந்து செல்கிறான். அதற்குள் அவனைத் தேடிக் கொண்டு, கிராமத்தில் இருந்து ஒருவன் வருகிறான். வழியிலே அவர்கள் வந்த வாகனம் விபத்துக்குள்ளாகி தலைகுப்புற கிடக்கிறது. வீட்டில் தலையில் பலத்த காயத்துடன், இப்ராஹிம் படுக்கையில் கிடக்கிறார். 'என் பயணம் முடிந்து விட்டது. எல்லையற்ற பரப்பில் கலந்து கொள்ள போகிறேன். எனக்கும் மனைவி இருந்தாள். பல நாட்களுக்கு முன் இறந்து விட்டாள். என்றாலும் அவளை நான் இன்னமும் நேசிக்கிறேன். எல்லா வாழ்க்கைகளும் ஒரு முடிவிற்கு வரத் தானே செய்யவேண்டும். இதோ இதை நீ வைத்துக் கொள்' என தான் அதுவரையிலும் வாசித்துக் கொண்டிருந்த குரானையும் தன் உயிலையும் கொடுக்கிறார். அவன் உயிலை வாசிக்கிறான் - என்னை தந்தையாக மோசஸ் ஸ்மித் தேர்ந்தெடுத்ததால், நான் வாழ்வில் கற்றுக் கொண்டதை அனைத்தையும் அவனுக்கே கொடுக்கிறேன்.

மோஸஸ் அந்தக் கடையின் உரிமையாளன். அவனையும் இப்பொழுது தெருமுனை அரபி என்றே விளிக்கிறார்கள். இப்ராஹிமால் மோமோ என்று செல்லமாக - முகம்மதுவின் சுருக்கமாக மோமோ என அழைக்கப்பட்டாலும், அவன் மோசஸாகத் தான் இருக்கிறான் சட்டப்படி. ஆனால், தெருவினருக்கு அவன் - மோமோ.

ஒரு நிறைவைத் தந்த படம். மனித நேயமிருந்தால், எந்த தடைகளையும் தாண்டி நேசிக்க முடியும் என்பதே செய்தி. முஸ்லிம்களைப் பற்றி எதிர்மறையான தகவல்களையேத் தந்து கொண்டிருக்கும் ஊடகங்களுக்கிடையில், இஸ்லாம் பற்றிய நல்ல விஷயங்களைக் கொண்டு கதையை நகர்த்துவது ஒரு மாறுதல். அதற்கு வலு சேர்க்கும் விதமாக, கதையின் வயதான பெரியவராக ஓமர் ஷெரிஃபை நடிக்க வைத்திருக்கிறார்கள். மனிதர் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், தனது மிகையற்ற நடிப்பின் மூலம், மான்ஸியர் இப்ராஹீமாகவே வாழ்ந்திருக்கிறார். இந்தப் பாத்திரம் குறித்து, பின்னர் குறிப்பிட்ட ஓமர், இந்தக் கதை தனக்காகவே அமைந்ததாக குறிப்பிட்டார். 'உண்மையான இஸ்லாம் அன்பையும், புரிந்து கொள்ளுதலையுமே தருகிறது - வன்முறையையும், தீவிரவாதத்தையும் அல்ல. இந்த திரைப்படத்தின் மூலம், தங்கள் மதங்களையும் கடந்து ஒருவரையொருவர் நேசிக்க முடியும் என்ற செய்தியை மக்களுக்கு என்னால் எடுத்துச் சொல்ல முடியும் என்ற உண்மை எனக்குப் பிடித்திருக்கிறது' என்றவரின் நடிப்பிற்குப் பரிசு கிடைத்தது - சிறந்த நடிகருக்கான சீசர் விருது.

கதையின் திரைக்கதை நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது. யாருக்காவது திரைக்கதை அமைப்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், இப்படத்தைப் பார்க்க வேண்டும். அரபி தானே, இவரை ஏமாற்றுவதில் ஒன்றும் தவறில்லையென சிந்திக்கும் சிறுவனிடத்தில் சிரித்துக் கொண்டே சொல்கிறார் - தான் அரபி அல்ல என்று. சிறுவன் அதிசயத்துடன் தன் தந்தையிடம் கேட்கிறான். மனதில் இருப்பதை ஒருவரால் அறிய முடியுமா என்று. நமக்கும் அதே கேள்வி எழுகிறது. பின்னர் - வேறொரு சந்தர்ப்பத்தில் அதற்கான விடையை இயக்குநர் தருகிறார்.

பெரியவர் சொல்கிறார் - தான் ஒரு சூஃபி என்று. அதுவும் வெளியே ஒரு சுற்று சுற்றி வரலாம் என்று நகர வீதிகளில் சுற்றி விட்டு, ஒரு கடையில் உட்கார்ந்து மது அருந்திக் கொண்டே சொல்கிறார். முஸ்லிம்கள் மது அருந்தலாமோ என ஐயப்படும் சிறுவனுக்கு விடை சொல்லும் பொழுது சொல்கிறார். சூஃபிக்கள், மனித நேயத்துடன் செயல்படுபவர்கள். மதங்களைத் தாண்டி மக்களிடம் அன்பு செலுத்துபவர்கள். வருவதை முன்கூட்டி அறிபவர்கள். தன் மரணத்தைக் கூட அந்தப் பெரியவரால் சொல்ல முடிகிறது. வாகனம் வாங்குவதற்காக கடைக்காரனுடன் பேரம் நடக்குமிடத்தில் எத்தனை நாட்களில் தருவீர்கள் என்று கேட்கையில், இரண்டு வாரம் என்கிறார் கடைக்காரன். இரண்டு வாரங்களில், நான் இறந்து விடுவேன் ஐயா என்கிறார் பெரியவர். பேரத்திற்காகப் பேசப்பட்ட வசனமாக அப்பொழுது தோன்றி, கவனத்தில் நிற்காது போய்விட்டாலும், பின்னர் இரண்டு வாரங்களில் அவர் மரணிக்கும் பொழுது, முன் நிகழ்ந்த இந்த உரையாடல் மனதில் எழுகிறது. இப்படி சூஃபிக்களின் குணங்கள் என்று மக்கள் நம்பும் ஒவ்வொன்றையும் இணைத்திருக்கிறார்கள். அதை மேலோட்டமாக படம் பார்த்தால் உணரமுடியாது. கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தால், அதுவும் சூஃபிக்களைப் பற்றிய பின்னணி தகவல்கள் இருந்தால் மட்டுமே உணர முடியும்.துருக்கியில் சூஃபிக்கள் குழுமி, பரவசத்துடன் ஆடுமிடத்தில் சிறுவனிடத்தில் சொல்கிறார் - Throw your hand up in the air, lean your head on your shoulders, and spin around your heart in ecstasy and loose all your bearings. You will find a new way bearing life for you.

Good.

ஆனால், இயக்குநர் முன்வைக்கும் இத்தகைய ஒரு இஸ்லாத்தை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. சூஃபிக்களைப் பற்றி இஸ்லாமியர்களிடத்திலே மாற்றுக் கருத்துகள் நிறைய உண்டு. இறைவனின் புகழ் பாடி, ஆடித்திரிவதிலே வணக்கம் புரியும் சூ•பிக்கள், அரசு நடத்தி, செல்வம் சேர்த்து வாழும் முஸ்லிம்களிடத்திலிருந்து பெரிதும் மாறுபட்டவர்கள். அதனால் அவர்களை நேசிப்பதிலும், தூற்றுவதிலும் சமபங்கு முஸ்லிம்களிடத்தில் உண்டு. அதிகார மையத்திலும் அதற்கு அருகாமையிலும் இருப்பவர்களிடத்தில், சூஃபிக்களைப் பற்றிய அச்சம் உண்டு. ஏழை எளிய மக்களிடத்தில், அந்த அச்சமின்றி, மதிப்பும் மரியாதையும், அன்பும் ஏராளம் உண்டு. அதிகார மையங்கள் தேவையான பொழுதில் மட்டுமே இறங்கி வரும். அக்பர் அஜ்மீர் வருவார், அதுவும் காலணிகள் அணியாது - காரணம் புதல்வன் இல்லாமை. இது போல் தேவைகள் தான் அதிகார மையங்களை கீழிறங்கச் செய்கிறது. இத்தகைய சூஃபிக்களிடத்தில் அன்பு கொள்ளும் எளிய முஸ்லிம்களால், முஸ்லிம்களாகத் தான் வாழ முடியுமே தவிர, அரசியல் சக்தியாக மாற்றங்களைத் தேடிக் கொள்ள முடிவதில்லை. அதனால் பக்திக்காக மாத்திரமே சூஃபிக்களை ஏற்றுக் கொள்ளும் முஸ்லிம்கள், அதிகார மையம் நோக்கிய பயணத்தில், இத்தகைய நேயத்தை ஏற்றுக் கொள்வதில்லை.

படத்தின் எந்த ஒரு கட்டத்திலும், ஒரு மதம் சார்ந்த தீவிரமான கருத்துப் பிரச்சாரமில்லை. தான் நம்புபவற்றைப் பேசுகிறார்கள். அடுத்தவரை மாற்றி தங்கள் மதத்தின் பால் ஈர்த்துவிட வேண்டும் என்ற முனைப்பில்லை. Fundamentalism என்பதற்கான விளக்கம் இதுவரையிலும் முற்றிலுமாகக் கொடுக்கப்படவில்லை யாராலும். என்னைப் பொறுத்தவரை, அடுத்தவர் மீது தங்கள் கருத்தைத் திணித்து, தங்கள் நம்பிக்கையின் பால் அவர்களை ஈர்த்துவிட வேண்டும் என்ற உன்மத்தமே fundamentalism என்று சொல்ல வேண்டும். மாறாக, தாங்கள் உண்மை என நம்புபவற்றின் மீதான நம்பிக்கைகளை அடிப்படைவாதம் என்று சொல்லுவது தவறு. இதை அடிப்படைவாதம் என்பவர்கள் பொய்யர்கள். 'என்னை தந்தையாக மோசஸ் ஸ்மித் தேர்ந்தெடுத்ததால், நான் வாழ்வில் கற்றுக் கொண்டதை அனைத்தையும் அவனுக்கே கொடுக்கிறேன்.' என்று தன் உயிலில், மோஸஸ் ஸ்மித் என்ற சிறுவனை இஸ்லாமியராக மாற்ற முயற்சிக்காமல், யூதராகவே ஏற்றுக் கொண்டு மகனாக பாசமும் நேசமும் காட்டியது தான் படத்தின் வெற்றியே. மத மாற்றத்திற்கான எந்த ஒரு முயற்சியும் இன்றியே, அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்துவதே மனித நேயம் - அடிப்படைவாதத்தை வென்றெடுக்கும் வழி என்பது தான் இந்தப் படம் தரும் செய்தி.

ஒரு நேர்மையான செய்தியை முன் வைத்த படத்தை பார்வையாளர்கள் சிறந்த படமாக தேர்ந்தெடுத்தில் எந்தத் தவறுமில்லை. தேர்ந்தெடுக்காமல் போயிருந்தால் தான் மனித நேயம் தோற்று, அடிப்படைவாதம் வென்றிருக்கும்.

கட்டாயம் பாருங்கள். இயல்பான, அன்றாட வாழ்க்கையின் பகுதியாக அமைந்த உரையாடல்கள் வழியாக, நாம் உணராமலே, நம்மிடத்தில் மனித நேயத்தை காட்டுகிறது. எதுவும் பேசப்படாமல்.

அது தானே திரைப்படம்.