Friday, September 7, 2007

balu mahendra's Yaatra - Malayalam

மனதை விட்டு நீங்க மறுக்கும் திரைப்படங்கள் அவ்வப்பொழுது வந்து கொண்டு தான் இருக்கின்றன. அத்தகைய திரைப்படங்களைத் தந்தவைகளுள் மலையாளத் திரையுலகும் அடங்கும். மொழிகளைத் தாண்டியும் கலைகள் படைக்கும் முனைப்புடைய கலைஞர்களை அது எப்பொழுதும் வரவேற்றிருக்கிறது. அமோல் பலேகர், கமலஹாசன், சலீல் சௌத்ரி, நௌசத், பாலுமகேந்திரா என பலரையும் அது கவர்ந்திழுத்திருக்கிறது. கிடைத்தது மிக அற்புதமான படைப்புகள் சில. பரிட்சார்த்தமான முயற்சிகளும் அங்கு அதிகம். மனித உறவுகளின் நுட்பத்தை அது அலசி ஆராயும் விதம் அம்மாநிலத்திற்கு வெளியே கொச்சைப்படுத்தப்பட்டாலும், மலையாளத் திரையுலகம் முன் வைத்த கதைக் களங்கள், இந்தியத் திரை உலகில் ஒரு சிலரால் மட்டுமே முடிந்திருக்கிறது. ஆனால், அம்மாதிரியான திரைப்படங்களுக்கு, ஒரு மாநிலம் முழுவதும் மக்கள் தங்கள் ஆதரவைத் தருகிறார்கள் என்றால், அது அம்மக்களின் சிறப்பு என்றே சொல்ல வேண்டும்.

அந்த வகையில் யாத்ரா ஒரு முக்கியமான படைப்பு என்றே சொல்ல வேண்டும். எத்தனை முறை பார்த்தாலும், ஒரு புத்துணர்ச்சியும், மனிதநேயத்தைக் கொஞ்சமேனும் சிந்திக்கவும் செய்யும் ஒரு நல்ல படைப்பு.

ஒரு காதல் கதையை எப்படி ஒரு கவிதை போல் மென்மையாகவும், அதே சமயம் அந்தக் காதல் நிகழும் தளம் - காலம் எப்படி கொடூரமாக ஒரு நிமிடத்தில் தன்னை மாற்றிக் கொள்கிறது என்பதை அழுத்தமாகவும் தெரிவிக்கின்றது. காலத்தைக் கடந்து ஒரு படைப்பு நிலைத்து நிற்க வேண்டுமானால், கதை நிகழ் காலத்தை அது வலுவாக படம்பிடித்துக் காட்ட வேண்டும்.

85ல் வந்த இந்த திரைப்படம், இன்றளவும் நம் நடைமுறை வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்றால், அது மிகையல்ல. இன்றும் போலிஸ் ராஜ்ஜியத்தில் தான் வாழ்கிறோம். ஒவ்வொரு சமயத்தில் ஒரு உத்தியைக் கையிலெடுத்துக் கொள்கிறது – காவல் துறை – தன் இருப்பை நிலைநாட்ட, அன்று கம்யூனிஸ சித்தாந்தவாதிகளுடன் பிரச்சினை. இப்பொழுது தீவிரவாதம். நாளை என்னவோ…?

உன்னி என்னும் உன்னிகிருஷ்ணன். ஒரு அநாதை. ஒரு வன அதிகாரியாக பணி. புதிதாக வந்த இடத்தில் துளசியைச் சந்திக்கிறான். அவளுக்கு ஒரு தந்தை உண்டு. மனைவியை இழந்து அந்த துக்கத்தில் குடிக்கும் பழக்கம் உள்ள தந்தை. துளசி அந்த மலைச்சாரலில் நடை பயிலும் தென்றலைப் போன்றவள். ‘ஓணக்கோல்’ பிடித்து சிலையாய் நிற்கும் கிருஷ்ணன் தான் பேசுவதை நிச்சயமாய் கேட்பான் என்று நம்பிக் கொண்டிருப்பவள். கோயில் திருவிழாவில் இனிமையாகப் பாடி ஆடவும் செய்வாள். சுழலும் விழிகளில் எப்பொழுதும் பாவங்கள் ஓடிக் கொண்டேயிருக்கும்.

ரம்மியான மலைக் கிராமச் சூழ்நிலையில், இருவரும் சந்திக்கும் பொழுது, இயல்பாக காதல் மலர்கிறது. அதிலும் உணர்ச்சி மிக்க வசனங்களோ, பாட்டுப்பாடி காதலைக் ‘கொண்டாடும்’ காட்சிகளோ இல்லாமல், இயல்பான காட்சி நகர்வுகளுக்கிடையில் பேச்சுக்கிடையில் காதல் வெளிப்படுகிறது. இருவரின் அப்பாவித் தனமே இருவரையும் ஒருவர் பால் ஒருவரை ஈர்க்கிறது. சிறு சிறு குறும்பாக காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கையில், திருப்பம் வருகிறது.

தன் திருமணத்தை தன் வாழ்க்கையில் கிடைத்த ஒரே நண்பனுக்கு அறிவிக்கும் பொருட்டு, நகரம் நோக்கி பயணம் போகிறான். அத்துடன் நயவஞ்சமிக்க ‘அரசு இயந்திரம்’ செயல்படும் எல்லைக்குள்ளும்.

நண்பன் இறந்து போய்விட்டதை தெரிந்து கொண்டு, மீண்டும் தன் ஊருக்குத் திரும்பும் பொருட்டு, நடந்து கொண்டிருந்தவன் ஒரு பெட்டிக் கடையில் சிகரெட் வாங்குவதற்காக தாமதித்த ஒரு பொழுதில், காவல்துறையின் கண்களில் படுகிறான். கைது செய்யப்படுகிறான். ஒரே குற்றம் – காவல்துறை தேடும் ஒரு தீவிரவாதியை ஒத்திருக்கிறான் தோற்றத்தில். எத்தனை சொல்லியும் கண்டுகொள்ளாத காவல்துறை அவனை ‘லாக்-அப்’பில் தள்ள, இங்கிருந்து வெளிப்படுகிறது – காவல்துறையின் ‘சலவை செய்யப்பட்ட’ மன நிலை. ஒரு கைதியாக இருந்தாலும் அவனுக்குக் கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகளைக் கூட மறுக்கிறது. தாகித்தவன் தண்ணீர் கேட்ட பொழுது, ஒரு காக்கி அவனுக்கு மூத்திரம் பெய்து கொடுக்கிறது. அறியாமல் வாயில் விட்டுக் கொண்ட பின்னர், உணர்ந்து, ஆத்திரமடைந்து, தந்தவன் மூஞ்சியில் விட்டெறிய முனையும் பொழுது, அவன் விலகிக் கொள்ள அவனது அதிகாரியின் மூஞ்சியிலே விழுந்து விட, அவனுக்குப் பூசை நடத்த, கதவுகள் திறக்கப்படும் பொழுது, உன்னி தப்பி ஓட காக்கிகளுக்கும் உன்னிக்கும் ஏற்படும் போராட்டத்தில் ஒரு காக்கியைத் தூக்கி வீச, அவன் தலை சுவரில் மோதி மரணம்.

கொலையல்ல. திட்டமிடல் அல்ல. ஆனாலும் ஒரு உயிர் போய்விட்டது. ஆக, உன்னியின் பக்கம் எத்தனை தான் நியாயமிருந்தாலும், சிறை வாசம். கடிதம் மூலம் சிறையில் தான் இருப்பதைத் தெரியப்படுத்துகிறான். சிறை வாழ்க்கையின் அவலங்களின் மீது அடுத்ததாக கவனம் பதிக்கிறது கதை. கைதியாக வருபவனை அலட்சியமாக, அற்பமாக நோக்கும் சிறை பணியாளர்கள். அவர்களது நிர்வாணத்தைக் கூட ஏளனமாகப் பார்க்கும் வக்கிரம். மொட்டை அடித்தல்.

சிறையினுள் பல கைதிகளின் கதை சிறு சிறு காட்சிகளின் மீதாக வெளிப்படுத்தப்படுகிறது. சிறையில் பார்வையாளாராக வரும் பெண்கள் மீதான பாலியியல் துன்புறுத்தல்கள், பார்வையாளாராக அனுமதிக்க மறுக்கும் அவலம், கடிதங்கள் மூலம் நிகழும் உணர்ச்சி பரிவர்த்தனைகள், இரவின் நிசப்தத்தில் எழும் இசையற்ற பாடல்கள், கைதிகள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் குடும்ப பின்னணிகள் என்று பல இடங்களில் கண்களைப் பணிக்கச் செய்யும் காட்சிகள். நடுவே தப்பியோட முயற்சிக்கும் கைதிகள் பிடிபட்டு கொடூரமாக தண்டிக்கப்படுதல். அதையும் மீறி, வாழும் துடிப்புடன், தப்பிக்க நினைக்கும் உன்னி – துளசியைப் பார்த்துக் கொள்ள யாருமில்லை என்ற அதீத உணர்ச்சிப் பெருக்கு.. பிடிபட்டு ‘லாடம்’ கட்டப்படுகிறான். நடுவே துளசியின் தந்தை வந்து போகிறார். துளசியின் பரிதாப நிலையை எடுத்துச் சொல்கிறார். உன்னி துளசிக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். யாரையாவது திருமணம் செய்து கொள்ளச் சொல்லி. துளசியிடமிருந்து வரும் கடிதத்தை வாசிக்க மறுக்கிறான். ஒரு முழுதான சிறைவாசத்தை அனுபவித்து வெளி வருகிறான்.

சிறையிலிருந்து விடுபடும் நாள் வருவதை தெரிந்து துளசிக்கு கடிதம் எழுதுகிறான். இன்னமும் தனக்காகக் காத்திருந்தால், எப்பொழுதும் சந்திக்கும் அந்த ஒற்றை மரத்தடியில், ஒரு தீபத்தை ஏற்றி வைக்கவும். அவளுக்காக இறங்கி வருவதாய். இல்லையென்றால் அவளது நல்வாழ்க்கைக்காக ஒரு பிரார்த்தனையுடன், பேருந்தை விட்டு இறங்கி தொந்தரவு தராமல், தன் பிரயாணத்தைத் தொடர்வதாய்.

இந்த ‘யாத்ரா’ தொடருமா? இல்லை இத்துடன் முடிவுக்கு வருமா?

தன் பயணத்தில் நடக்கிறான். எவரும் அவனுக்கு வாகனங்களில் இடம் மறுக்க, ஒரு பள்ளிச்சுற்றுலா பேருதில் இடம் கிடைக்கிறது. இதுதான் படத்தின் முதல் காட்சி. இறுதிக் காட்சியும் இதே. பயணத்தில் அவன் சொல்லிய கதையில், அனைவரும் கலந்து, இறுதியில் துளசி அங்கு தீபத்துடன் நிற்க வேண்டுமே என்ற பிரார்த்தனையுடன் அனைவரும் பேருந்தின் சன்னல் வழியாக துடிக்கும் இதயத்துடன் காத்திருக்க…

துளசி நிற்கிறாள் – பெருகும் அன்புடன். ஆம். அவள் நிற்கிறாள் – ஒரு தீபத்துடன் அல்ல. ஆயிரமாயிரம் தீபங்களுடன். பிரகாசமாக. உன்னி இறங்கிக் கொள்ள, பள்ளிச் சிறுவர்களின் பயணம் தொடர்கிறது யாத்ரா பாடலுடன்.

நடித்தவர்களில் மனதைத் தொட்டவர்களின் பட்டியல் நீளம். உன்னியாக நடித்த மம்மூட்டி, துளசியாக ஷோபனா, பாலுமகேந்திராவின் காமிரா, இளையராஜாவின் இசை. அதிலும் பாலுமகேந்திரா, தனக்குப் பிடித்த மலைச்சரிவு கிராமத்தை ஒளிப்பதிவு செய்திருப்பதைக் காண கண் கோடி வேண்டும். ஏனென்றால், காமிரா என்பது ஒரு கண் என்ற அளவிற்கே மக்கள் அறிந்து வைத்திருந்த பொழுது, அதிலிருந்து எத்தனை வகையான பார்வைகளை மக்கள் முன் வைக்க முடியும் என்று அற்புதமாக காட்சிகளை வித்தியாசப்படுத்தி காட்டியவர் அவர். எல்லோரும், அவரது ஒளிப்பதிவுகளை மட்டுமே ரசித்துக் கொண்டிருக்க, அவரது பார்வைகள் காமிராவையும் தாண்டி, கதைக் களத்தில் விரிந்த பொழுது, சில அற்புத திரைப் படங்கள் கிடைத்தன. (இரண்டு பொண்டாட்டிக் காரன் கதை அவரிடத்தில் ஒரு obsession போல் பின்னர் ஒட்டிக் கொண்டது. அது அவருடைய குற்ற உணர்ச்சியினால் கூட இருக்கலாம்…)

மலைக்கிராமத்தில் புகை மூட்டங்களின் நடுவே விரியும் ஒளி வெள்ளத்தையும், இலைகளின் பசுமையையும், பூக்கள் பூத்து குலுங்குவதையும், இலைகள் பழுத்து சிவப்பதையும் படம் பிடிக்கையிலே நாம் தவறவிடுவது காலம் நகர்ந்து கொண்டிருப்பதை. வெட்ட வெளியில் வெளிச்சம் போடும் கோலத்தைக் காட்டினால், வெளிகளை வெட்டிக் கட்டப்பட்ட உள்புறத்தில், கசிந்து வரும் வெளிச்சம் என்னவோ, பாலுவின் காமிராவிற்காக மட்டுமே தாங்கள் அங்கு வருவதாக சொல்வது போலிருக்கின்றது.

வெளிச்சம், இருட்டு, வண்ணம் இந்த மூன்றினால் மட்டுமே காமிராவினால் பேச முடியும் என்னும் பொழுது, அதை குறித்து ஒரு புரிதல், அறிதல் இருந்தால் மட்டுமே அவற்றை உள்வாங்கிக் கொள்ள முடியும் ஒரு கலைஞனால். ஒரு சிறந்த திரைக்கதையும், அதை காமிராவின் மொழியில் சொல்லும் திறன் பெற்ற ஒரு கலைஞன் இருக்கும் பொழுது, அது நடிப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். மம்மூட்டி போன்ற நடிகர்களுக்கு இதை விட ஒரு நல்ல தளம் வேண்டுமா என்ன? இத்தனைக்கும் மம்மூட்டி அப்பொழுது ஒரு பெரிய நடிகர் கூட கிடையாது. அப்பொழுது தான் ஓடுடைத்து வெளியான சிறு பறவை போல் நடிப்புலகில் காலடி எடுத்து வைத்த நேரம். பறப்பதற்குச் சொல்லித் தர ஒரு அற்புத கலைஞன் கிடைத்த பொழுது, அதை மிகையற்ற தன் நடிப்பினால், எளிதாகக் கையாண்டிருக்கிறார். அது போன்றே, துளசியாக வரும் ஷோபனா. நாட்டியத்தில் பரிச்சியமுள்ள அவருக்கு விழி அசைவுகளும், உடல்வாகும் வெகுவாக ஒத்துழைக்கிறது. இவர்களுடன் இளையராஜாவின் இசையும் கூட்டணி அமைத்துக் கொள்கிறது.

இந்தக் கூட்டணியில், யாத்ரா ஒரு நதியாக, கரையுடைக்கும் பெருவெள்ளமாக இன்றி, அமைதியாக அமிழ்ந்து நீச்சலடிக்கத் தூண்டும் மென்மையுடன் பயணிக்கிறது.

படம் முடிந்து நீண்ட நேரமாகியும் துளசியும், உன்னியும் மனம் விட்டு நீங்க மறுக்கிறார்கள். காதலின் ஆழத்தைப் பார் – எங்கள் போல், உங்களால் ஒருவருக்கு ஒருவராகக் காத்திருக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே…