Deepa Mehta's Water.
தனது முப்படைப்புகளில், மூன்றாவது படைப்பாக Water என்ற திரைப்படத்தை 7 வருட போராட்டத்திற்குப் பின், வெளிக்கொண்டு வந்திருக்கிறார்,
சமூகத்தால் விதவைகள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை விவாதிக்கும் படம். கதைக்களம் 1938. ஆங்கிலேயருக்கு எதிராக நடக்கும் பலவகைப் போராட்டங்களிற்கிடையில், சமூக மாற்றங்களுக்காகவும் பல போராட்டங்களுக்கு களம் அமைக்கப்பட்ட நேரம்.
சுய்யா என்ற எட்டு வயது சிறுமி விதவையாகின்ற பொழுதில் தொடங்குகிறது படம். வளையல்கள் உடைக்கப்பட்டு, தலை மொட்டையடிக்கப்பட்டு, வெள்ளுடை உடுக்கப்பட்டு, விதவைகள் காப்பகத்தில் அடைக்கப்படுகிறாள்.
ஆம், அது ஒரு சிறை தான். சாவை எதிர்நோக்கிய வாழ்க்கையை, விதவைகள் வாழ்வதற்கென அமைக்கப்பட்ட விடுதி.
"இனி இது தான் உன்னுடைய வீடு" என்னும் தந்தையிடம், "வீடென்றால், அம்மா எங்கே" என கேட்கும் சுய்யாவிற்கு விடை தர இயலாதவர்களால், உள்ளே இழுத்துச் செல்லப்படுகிறாள். கதவு இழுத்து அடைக்கப்படுகிறது - இந்த உலகும் அன்றிலிருந்து அவளுக்கு மறுக்கப்படுகிறது.
மதுமிதா என்ற விடுதித் தலைவி, சகுந்தலா என்ற நடுத்தரவயதைத் தொட்ட விதவை, கல்யாணி என்ற இளம் விதவை, இவர்களுடன் மேலும் பல வயோதிக விதவைகள், சாகும் வரை வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில், அந்த விடுதியிலிருந்தாலும், ஒவ்வொருவரும், வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தை நேர்கொள்ளும் விதத்தில் படத்தின் கதை சுவராஸ்யமாக நகர்கிறது.
உலகின் அனைத்து வாசல்களும் மூடப்பட்டாலும், விளிம்பு நிலையில் வாழும் இந்த விதவைகளின் உலகிற்குள்ளும், செய்திகள் வருகின்றன. குலாபியின் மூலமாக. குலாபி ஒரு திருநங்கை. மதுமிதாவிற்கு கையாள். வாடிக்கையாளார் பிடிப்பது மட்டுமின்றி, கஞ்சா கொண்டு வந்து மதுமிதாவிற்குக் கொடுப்பதுவும், ஊர்ப் புறணிகளை பேசுவதும் அவள் தான்.
விநோதம்- சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட, இருவகை மனிதர்கள் - விதவைகள், திருநங்கை இணைந்து, இந்த உலகை அதன் போக்கில் சந்திக்கும் விதம். இந்த உலகம் அந்த விதவைகள் உலகிற்குள் வேறு எந்த வகையிலும் நுழைய மறுக்கும் பொழுது, அதே விளிம்பின் மற்றொரு தளத்தில் இருக்கும் ஒரு திருநங்கையின் உதவியால், விடுதியின் செலவு சரிக்கட்டப்பட வாடிக்கையாளர் பிடிப்பது நடக்கிறது. உலக நடப்புகள் அறியப்படுகிறது. ஊர்நடப்பாக, காந்தியைப் பற்றிய செய்தியும் வருகிறது - அனைத்து தகவல்களும், பின்னணியும். ஆனால், அது தலைவியோடு முற்றுப்பெறுகிறது. மற்றவர்களைப் போய்ச் சேரவில்லை. சேரவிடுவதில்லை.
மதுமிதாவின் தோரணையைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாதவள், சகுந்தலா. படிக்கத் தெரிந்தவள். படிப்பினால் கிடைத்த அறிவும், கண்ணியமும் மிக்கவள். அம்மா இல்லாத வீடா என்று விடுதியை ஆரம்ப நாளன்று ரணகளப்படுத்திய சுய்யா, அம்மாவின் வடிவமாக சகுந்தலாவைப் புரிந்து கொண்டாளோ என்னவோ, பட்டென்று ஒட்டிக் கொள்கிறாள்.
சுய்யாவின் மற்றொரு நட்பு - கல்யாணி. சில சலுகைகள் வழங்கப்பட்டு, விடுதித் தலைவியின் தனிப்பட்ட கரிசனத்திற்குரித்தானவள் கல்யாணி. காரணமில்லாமல் இல்லை. விடுதியின் செலவை சரிகட்ட, கல்யாணியின் இளமை விபச்சாரத்திற்குள்ளாக்கப்படுகிறது. அதனால், தலையில் நீளமாக முடி வளர்த்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறாள். செல்லப் பிராணியாக ஒரு நாய் - காலு என பெயர். ஆனால், அதே சமயம் அவள் தூய்மையற்றவள் என மற்ற விதவைகள் ஒதுக்குகிறார்கள். பகலில், தனது நாயுடனும், இஷ்ட தெய்வம் கிருஷ்ணன் வழிபாட்டிலும் கழிகிறது. இரவு நேரங்களில், குலாபியினால் அழைத்துச் செல்லப்படுகிறாள் - வாடிக்கையாளர்களைச் சந்திக்க.
இந்த நால்வருக்குமிடையிலும், விடுதியின் பின்னணியிலும் விதவைகளின் பிர்ச்சினைகள் அலசப்படுகின்றன. மதுமிதா வயதானவள். வாழ்க்கையில் கஞ்சா பிடிப்பது ஒன்றே பெரும் பாக்கியம் என்று எண்ணியே வாழ்பவள். அதே சமயம் விதவைகளுக்கு இந்து மத தர்ம விதிகளால் நிர்ணயம் செய்யப்பட்ட வாழ்க்கையை, விதவைகள் கட்டாயம் கடைப்பிடித்தே ஆகவேண்டும் என்று உறுதியாக இருப்பவள்.
சகுந்தலாவும், இந்து மத நம்பிக்கைகளைத் தீர்க்கமாக நம்புபவள். அதன்படி நடக்கவும் செய்பவள். மதுமிதா போன்ற அராஜகம் இல்லாதவள். நடுத்தரவயதுடையவள். புதிய நம்பிக்கைகளை, வாழ்க்கை வடிவங்களை - அனுமதித்தால், ஏற்றுக் கொள்ளத் தயங்காதவள். விதவைகள் மறுமணத்திற்கு ஆதரவாக சட்டமிருக்கிறது என்ற செய்தியைக் கேட்டதும், மதுமிதாவினால், சிறை வைக்கப்பட்ட கல்யாணியை விடுவிக்கிறாள். மத ஆச்சாராங்களை மீறுகிறோம் என்ற படபடப்பின்றி.
கல்யாணி - மத தர்மங்களைப் பற்றிய பெரிய புரிதல் ஏதுமில்லையென்றாலும், விடுதியின் நன்மைக்காக தன்னை மதுமிதா உபயோகித்துக் கொள்வதை விதி என்ற தத்துவார்த்தப் புரிதலுடன், விபச்சாரத்தில் தான் ஈடுபடுத்தப்படுவதை சகித்துக் கொள்கிறாள்.
சுய்யா சிறுமி. மத தர்மங்களைப் பற்றிய பயமோ, விதியென்னும் தத்துவப் புரிதலோ, இல்லாமல், இயற்கை நீதியின் அடிப்படையில் இயல்பான கேள்விகள் எழுப்புகிறாள். 'ஆண் விதவைகள் வீடு எங்கே இருக்கிறது?' என்பது போன்ற கேள்விகள் ஆங்காங்கே. பதில் சொல்லத் தான் யாருமில்லை. Obviously, she might be the voice of the Director.
கல்கத்தாவில், தனது வக்கீல் படிப்பை முடித்து விட்டு, ராவல்பூருக்குத் திரும்புகிறான் - நாராயண். அத்துடன் காந்தியின் தத்துவங்களையும் தன்னுடன் எடுத்து வருகிறான். ஊருக்குத் திரும்பும், நாராயணனைத் தற்செயலாக, ஆற்றங்கரையில் சந்திக்கிறாள் - கல்யாணி. பார்த்ததும் காதல். பார்ப்பதற்கு ஒரு தேவதை போன்று தோற்றமளிக்கும், கல்யாணியை யாருக்குத் தான் பிடிக்காது? கண்களின் வழியாக வெளி உலகுடன் பேச முனையும் அவளது புனிதம், உடலைச் சுற்றிய பாவங்களையும் மீறி சுடர்விடுகிறது. அவளைத் தேடித் திரிந்த நேரம் போக, மீதி நேரங்களில், தன் நண்பனுடன் பேசி, தான் சார்ந்த பணக்கார மேல்வர்க்கத்தின் - பிராமின்களின் தன்மையை அறிந்து கொள்கிறான். இரவில், ஆற்றைக்கடந்து, அக்கறையில் இருக்கும் பணக்கார பிராமின் வர்க்கத்திற்கு இரையாகும் விதவையையும், குலாபியையும் பார்க்கிறான். இது அன்றாடம் நடக்கக் கூடியது என சொல்கிறான் நண்பன். விதவைகள் மீது இன்னமும் பரிதாபம் பிறக்கிறது. எப்படியும் விதவையான கல்யாணியைத் திருமணம் செய்து கொள்ள உறுதி கொண்டு தன் தாயிடம் கல்யாணியைப் பற்றிப் பேசுகிறான். பதறிப் போகும் தாய் ஏற்க மறுக்கிறாள். நாராயணனுக்கு அது பற்றிக் கவலையில்லை. தன் முற்போக்கு சிந்தனைகளுக்கு தன் தந்தை ஆதரவு தருவார் என்ற நம்பிக்கையுடன், கல்யாணியைத் தொடர்கிறான். சிறிய சிறிய சம்பவங்களுக்குப் பின்னர், காதல் உறுதியாக, திருமணம் செய்வதற்காக, ஆற்றைக் கடந்து செல்லும் பொழுது, அக்கறையில் தோன்றும், தன் வீட்டின் பின்வழியை அவளுக்குக் காட்டுகிறான். படகில் இருந்தவாறே. அவளுக்கு அந்த வீட்டைத் தெரியும் - பலமுறை வந்து சென்றதினால். படகைத் திருப்பச் சொல்கிறாள். எந்தக் காரணமும் தர மறுக்கிறாள். உன் தந்தையிடம் கேள் என்கிறாள். அவளை இக்கரையில் விட்டு விட்டு, தன் வீட்டையடைந்து, தன் தந்தையிடம் கல்யாணியைப் பற்றிப் பேசுகிறான். வாதாடுகிறான். தன் தந்தை எடுத்து வைக்கும் பிற்போக்குப் பிராமணிய சிந்தனைகளைக் கேட்டு, அதிர்ச்சியடைகிறான். 'ஒரு பிராமணன் எத்தனைப் பெண்களையும், எத்தகையப் பெண்களையும் அனுபவிப்பதில் தவறில்லை. ஆனால், திருமணம் செய்து கொள்ளக் கூடாது. நீயும் அவளை வைத்துக் கொள். ஆனால், திருமணம் செய்யாதே' என அறிவுறுத்துகிறார். தந்தையைப் பற்றிய பிம்பங்கள் உடைய, தன் முடிவை மாற்றிக் கொள்ள மறுத்து, வீட்டை விட்டு வெளியேறுகிறான். சற்றுத் தள்ளி மறைவில், நின்று இந்த உரையாடல்களைக் கேட்கும் தாய், தன் மகனை உச்சி முகர்ந்து வாழ்த்தி அனுப்புகிறாள் - தன் கணவனைப் போன்று அல்லாமல், நியாய உணர்வு கொண்டவனாக தன் மகன் இருப்பதில் பெருமிதம் கொண்டவளாக.
தந்தையினால் துய்க்கப்பட்ட உடலை, மகனுக்கு மனைவியாகத் தர இயலாத சூழ்நிலையை உணர்ந்து, விடுதிக்குத் திரும்பும் கல்யாணியை ஏளனத்துடன் வரவேற்கிறாள் - மதுமிதா, நிபந்தனைகளோடு. 'வாடிக்கையாளர்களைச் சந்திக்க வேண்டும்.'
காதல் வயப்படும் முன், எந்த உணர்ச்சிகளுமின்றி, சலனமின்றி, வாடிக்கையாளர்களைச் சந்திக்கச் சென்ற கல்யாணிக்கு இப்பொழுது அந்த நினைப்பையே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளுக்குத் தெரியும் - நாரயணனை என்றுமே மணக்க முடியாதென்று. அதே சமயம் நாரயணனை என்றுமே தன் மனதினின்றும் துறக்கவும் முடியாது. மனதிலே நாரயணனின் நினைவுகளைச் சுமந்து கொண்டே, வாடிக்கையாளர்களின் தேகங்களையும் சுமக்க அவள் தயாராக இல்லை. இப்பொழுது அவளுக்கு முன் இருந்த ஒரே வழி - கங்கையின் நீரினுள் அமிழ்ந்து, தன் அசுத்தங்களையெல்லாம் நிரந்தரமாகத் துறந்து விடுவது ஒன்று தான்.
நீர் சுத்தம் செய்யும் - எல்லா அழுக்குகளையும் போக்கி விடும். கல்யாணியின் அசுத்தங்கள் அனைத்தும் கரைந்து போயின. அவளும் கரைந்து போனாள்.
கல்யாணியின் மறைவு, சுய்யாவிற்கு ஒரு நட்பு இழப்பு. தன் பிறந்த வீட்டைப் பற்றிய திடீர் நினைப்பு. சகுந்தலாவிற்குள் இந்த விதவைக் கோலத்தை மாற்றத் துடிக்கும் உறுதி. நாராயணனுக்கு, தந்தையின் பிற்போக்கு பிராமணியத்தை உதறித் தள்ளி விட்டு, காந்தியின் வழியில் போக வேண்டும். ஆக ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு போராட்டம். கல்யாணியின் சிதையினருகில், அமர்ந்திருக்கும் சுய்யா, சகுந்தலாவிடம் சொல்லிக் கொள்ளாமலே, விடுதிக்குப் போய், மதுமிதாவிடம் சொல்கிறாள் - தன்னை வீட்டுக்கு அனுப்புமாறு. கல்யாணியின் இழப்பால், பெரிதும் நட்டமடைந்திருந்த மதுமிதா, தீர்க்கமாக சுய்யாவைப் பார்க்கிறாள் - சன்னலுக்கு வெளியே இருந்து பேசிக் கொண்டிருக்கும் குலாபியைப் பார்க்கிறாள். புரிந்து கொண்ட குலாபி, வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போவதாகக் கூறி படகில் ஏற்றி அக்கறைக்கு அழைத்துச் செல்கிறாள் - பணக்கார கிழ ஓநாய்கள் வாழும் வீடு ஒன்றிற்கு.
சுய்யாவைக் காணாத சகுந்தலா பதறி தேடுகிறாள். குலாபியினால், அக்கறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதை அறிந்த அவள், படகுத் துறைக்கு வந்து, படகோட்டிகளை எழுப்ப முயல்கையில், குலாபி திரும்பி படகைக் கரையில் நிறுத்தி விட்டு தப்பி ஓடுகிறாள் - சகுந்தலாவைக் கண்டு அவளுக்கு அச்சம். படகில், பிய்த்தெறியப்பட்ட பூமாலையைப் போன்று வாடிக்கிடக்கிறாள் சுய்யா. கல்யாணிக்கு மாற்றாக, சுய்யாவை பலியிட நினைக்கும் மதுமிதாவிடமிருந்து, சுய்யாவைக் காப்பாற்றத் தீர்மானிக்கிறாள், சகுந்தலா. அதே வேளையில், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட காந்தி, புகைவண்டி நிலையத்தில், காலைப் பிரார்த்தனை செய்கிறார் - எல்லோரும் கலந்து கொள்ள வாருங்கள் என ஒலி பெருக்கி அழைப்பு வருகிறது.
சகுந்தலா செல்கிறாள் - காந்தி உணமையே கடவுளென உரையாற்றுகிறார். சுய்யா அந்த விதவைகள் விடுதியெனும் நரகிலிருந்து தப்ப வேண்டுமென்றால், காந்தியுடனே அனுப்பி வைக்கப்படவேண்டும் என்று உணர்கிறாள். ஆனால், சகுந்தலாவால், காந்தியை நெருங்க முடியவில்லை. புகைவண்டி நகர, நகர சகுந்தலாவும், மெல்ல மெல்ல முன்னேறுகையில், சகுந்தலாவின் குரல் கேட்டு, எட்டிப் பார்க்கிறான் - நாராயணன். சகுந்தலா, சுய்யாவை நாரயணனிடம் ஒப்படைக்கிறாள் - காந்தியிடம் சுய்யாவை சேர்த்துவிடுவதான உறுதிமொழியுடன் நாராயணனும் அவளை அழைத்துச் செல்கிறான்.
இத்துடன் படம் நிறைவடைகிறது.
விதவைகளின் பிரச்சினை மட்டுமின்றி பெண்களின் நிலையும் சேர்த்தே பேசப்படுகின்றது. அலங்காரப் பொம்மைகளாக மட்டுமே பெண்களின் உரிமைகள் - நல்ல உடை, நகை, பூ, குங்கும அலங்காரங்கள் - அனுமதிக்கப்படுகின்றன. உதாரணம் நாராயணனின் தாயார். 'வீட்டில் எங்கே இருக்கிறார் தந்தை' என மகனிடம் ஆதங்கப்படும் பொழுது, பெண்களின் நிலைமை அன்றிலிருந்து இன்று வரை மாற்றங்களுக்கு உள்ளாகாமல் அதே நிலைமையில் இருக்கிறதென புரிகிறது.
சகுந்தலா, கல்யாணி காதல் வசப்பட்டதை அறிந்து அவளுள்ளும் வாழ்க்கை குறித்தான ஏக்கங்கள் துளிர்விடுகின்றன. சுய்யாவிடம், தான் பார்ப்பதற்கு எவ்வாறு இருக்கிறேன் என கேட்கிறாள். 'வயதானவளாக இருக்கின்றாய்' என சுய்யா சொன்னதும், முகம் சுருங்கி விடுகிறது. வாழ்க்கையை திருப்பி அடைய முடியாத தூரத்திற்கு வந்து விட்டோம் என புரிகிறது. தான் பணிவிடை செய்யும் கங்கை கரை சாது, அவளிடம் பேசும் பொழுது, இன்னமும் தன்னால், வாழ்க்கையின் பிடிப்பை முற்றிலும் துறக்க இயலவில்லை என்பதைக் கூறுகிறாள். ஆதங்கத்துடன், 'விதவைகளுக்கு இது தான் விதிக்கப்பட்ட வாழ்க்கையோ?' என சாதுவிடம் கேட்கின்ற பொழுது, விதவைகள் மறுமணம் செய்து கொள்ள சட்டமியற்றப்பட்டதை அவளுக்குத் தெரிவிக்கிறார். அதுவரையிலும் அந்த செய்தி, அவளுக்குத் தெரியாது. யாருமில்லை, சொல்லித் தர.
இந்தப் புதிய செய்தி, புது நம்பிக்கைகளை விதைக்க, தான் பெறவியலாத வாழ்க்கையைப் பிறருக்குக் பெற்றுத் தர உறுதி கொள்ளும் பொழுது, சகுந்தலாவின் வாழ்க்கை புது அர்த்தம் பெறுகிறது. மதுமிதாவின் சிறையிலிருந்து, கல்யாணியை விடுவித்து அனுப்புகிறாள். பின்னர், சுய்யாவை தன் திட்டங்களுக்குப் பலி கொடுக்க நினைக்கும், மதுமிதாவிடமிருந்து மீண்டும் காப்பாற்றுகிறாள். சகுந்தலாவாக நடித்த, சீமா பிஸ்வாஸ், இயல்பான தன் நடிப்பால், ஒரு உறுதியான, ஆனால், அதே சமயம் மதவிதிகளை மீற இயலாது தவிக்கும் பெண்ணாக சிறப்பாக நடித்துள்ளார். கல்யாணியாக நடித்த லிசா ரே பார்ப்பதற்கு அழகு. ஒரு இந்தியப் பெண்ணாக நடிப்பதற்கு மிக மெனக்கெடுத்து, இந்திய விதவைப் பெண்களுடன் நேரிடையாகப் பழகி அவர்களுடைய உடல் அசைவுகளையும் உள்வாங்கி நடித்திருக்கிறார். பரிதாபத்திற்குரிய ஒருவராக நடிக்கும் பொழுது, இயல்பாகவே, அந்தக் கதாபாத்திரத்தின் மீது ஒரு ஈடுபாடு வந்து விடும். அது கல்யாணியின் பாத்திரப் படைப்பிற்கு ஒரு வலு. விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்ணாகக் காட்டப்பட்டாலும், அது குறித்த அருவெறுப்பு ஏதும் வராதிருப்பதற்கு, அந்தப் பாத்திரத்தில் நடித்த லிசா ரேயின், innocent looksம் கூட ஒரு காரணமாக இருக்கக் கூடும். இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறாள் - சுய்யா பாத்திரத்தில் நடித்த, சரளா என்ற சிறுமி ஹிந்தியோ, ஆங்கிலமோ தெரியாத அவளிடத்தில், மொழி பெயர்ப்பாளர்கள் மூலமும், சைகைகளின் மூலமும் மட்டுமே தொடர்பு கொண்டு, நடிக்க வைத்திருக்கிறார்கள்.
படத்தின் மற்றொரு சிறப்பம்சம் ஒளிப்பதிவு. நீர்ப்பரப்புகளின் நீலம், தாவரங்களின் பசுமை, இருளின் மங்கிய கருமை, விளக்குகளின் மஞ்சள் ஒளித்துகள்கள் என பட நகர்வுகளின் பின்னணி தளத்தில் மௌனமாக இயங்குகிறது, காமிரா. காட்சியின் தேவைக்கேற்ப ஒளியளவு கூடவும் குறையவும் செய்கிறதென்றால், நிழல்களும் அது போலவே. ஒளி குறையும் பொழுதெல்லாம், நகரும் நிழல்கள் ஆக்கிரமிக்கின்றன திரையை. இந்த ஒளிக்கலவையின் உடன், ஒலியும் இசைந்து கொள்கின்றது. பாடல்களுக்கு இசை, A.R.ரஹ்மான். பின்னணி இசை மைக்கேல் டான்னா. இந்திய இசை ஒலிக்குறிப்புகளைக் கச்சிதமாக வரவழைத்திருக்கிறார். காதலர்களின் சந்திப்பின் போது ஒளியும், ஒலியும் வசனங்களைத் தேவையற்றதாக்குகிறது. கங்கை நதியின், அமைதியான ஓட்டத்திற்கு கரையாக நிற்கும், படிக்கட்டுகள் எல்லாம், செட் போடப்பட்டு எடுக்கப்பட்டன என்பது, படத்தின் இயக்குநர் சொல்வதால் தெரிகின்றது. அதிலும், வீடுகள், வீதிகள், கோயில்கள் என அனைத்தும் அதே போல் செட் என்பது எத்தனை உழைப்பு தேவைப்படுகிறது ஒரு திரைப்படத்தை உருவாக்க என அறியவைக்கிறது.
விதவைகள் இத்தனை துயரத்திற்குள்ளாக்கப்பட்டவர்களா என்ற பரிதாபம் இயல்பாக எழுகிறது. படத்தில் விவாதிக்கப்பட்ட விஷயம் - விதவைகளை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்கள், சமூக பொருளாதார நிர்ப்பந்தங்களுக்காக, மதத்தின் பேரிட்டு, அதன் மீதாக கற்பிதம் செய்து கொண்ட, இந்து பழமைவாத ஆண்களே என்பது தான். மனு தர்மம் என்ற தத்துவத்தினால் கட்டமைக்கப்பட்ட புரிதலே, விதவைகளுக்கான இந்த பரிதாப நிலை என்ற வாதத்தை முன் வைக்கிறது. படத்தின் தொடக்க வரிகளே, மனு தர்மத்துடன் தான் தொடங்குகிறது. இணையத்தில், இன்று பலரும், மனு தர்மத்தைக் கைவிட்டு விட்டோம் என்று மார் தட்டிக் கொண்டாலும், மனு தர்மம் என்ற மனித உரிமைகளை மறுக்கும் தத்துவங்களை இன்னமும் இந்து மதவாதிகள் கைவிடவில்லை என்பதே, இந்த திரைப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பு குறிக்கிறது. ஒரு கருத்தாக்கமாக இந்தப் படத்தின் மீது எழுந்த எதிர்ப்பைக் காட்டிலும், தீபா மேத்தாவின் மீது எழுந்த கோபம் தான் முதன்மையானது. அவரது முந்தைய படமான, Fire திரைப்படம் திரையிடப்பட்ட அரங்குகள், தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. புறக்கணிக்கப்படும் பெண்களுக்காக வக்காலத்து வாங்கும் படம் தான் என்றாலும், புறக்கணிப்பிற்கு அடிப்படையான காரணம், மத ஈடுபாடு என்பதும், பெண்கள், தங்கள் பாலியியல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் சுயதேடுதலே அவர்களது கோபத்தைக் கிளறிவிட்டது. ஒரு பொருளாகப் பார்க்கப்பட்ட பெண், தனக்கென சுயவிருப்பமும், அதை தேடி அடைய முயற்சித்து, பெண் என்ற தன் ஆளுமையை வெளிப்படுத்த முனைந்ததும் தான் அவர்களது கோபத்தின் அடித்தளம். பெண் என்ற ஆளுமையை வெளிப்படுத்த முனைவது எந்த மதத்திலும் அனுமதிக்கப்படவில்லை என்கையில், இந்து மத அடிப்படைவாதிகளும் அதைத் தடை செய்ய முனைந்ததில் வியப்பில்லை தான்.
இந்தப் பின்னணியில், படத் தொடக்கத்தின் போது கசிந்த செய்திகளைக் கொண்டு, மீண்டும் தீபா மேத்தா, இந்து மத விமர்சனத்தில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தியே விடவேண்டும் என்ற தீர்மானத்துடன் செயல்பட்டது, இந்து மத அடிப்படைவாத அமைப்புகள். சமூக புறக்கணிப்பு என்ற கொடூரமான அவலத்தை விதவைகள் மீது பிரயோகித்து, விளிம்பு நிலை மனிதர்களாக - எந்த வித உரிமையுமின்றி, வாழச் செய்யும் அவலத்தைக் குறித்தான கேள்வி, இந்து மதத்தின் மீதான தாக்குதலாக எடுத்துக் கொண்டனர். இந்து மதத்தைக் காப்பாற்றுபவர்கள் என்ற பிம்பத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள, தங்கள் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள, இந்த அடிப்படைவாதிகளின் முனைப்பு தான் இந்த திரைப்படத்திற்கான வன்முறையான எதிர்ப்பு. இந்தியாவைப் பற்றிய தவறான தகவல்களைத் தருகிறார் மேல்நாட்டினருக்கு என்று பிரச்சாரம் வேறு. சத்யஜித் ரேயின் மீது கூட இத்தகைய தவறான பிரச்சாரம் உண்டு - 'இந்தியாவின் ஏழ்மையை மேல்நாட்டினருக்கு விற்கிறார்' என்று. அப்பொழுது ஒரு கருத்துப் பிரச்சாரமாக, வாதமாக வைத்த தன்மை இப்பொழுது அடியோடு மாறி, தீ வைப்பாகவும், கொடும்பாவி எரிப்பாகவும், கொலை மிரட்டலகாவும் மாறி முன்னேற்றம் பெற்றிருக்கிறது. இந்த அடிப்படைவாதிகள் செய்த வன்முறை தான் இந்தியாவிற்கு தொடர்ந்து அவமதிப்புகளை தேடித்தருகிறது என்பதை புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொண்டாலும், உள்ளூரில், தங்கள் சரக்கு விலை போக வேண்டுமென்றால், இத்தகைய 'மத பாதுகாப்பு வன்முறை' கட்டவிழ்ப்பின் மூலமே சாத்தியப்படும் என்பதை அறிந்தே தான் செய்கிறார்கள்.
தாலி செண்டிமெண்ட் என்ற தமிழ்ப்பட நிரந்தர கதையமைப்பு முறையைக் குறித்து ஒரு முறை கூட இவர்கள் வாய் திறப்பதில்லை. ஏனென்றால், தாலி செண்டிமெண்ட் என்ற கருத்தாக்கமே, ஆண்களின் நலனைப் பேண வேண்டும் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்டமைப்புச் செய்யப்பட்டது என்னும் பொழுது, அது அவர்கள் விரும்பிய சமூக சிந்தனையை ஒட்டி அமைந்திருக்கிறது. ஆண் மேலாதிக்கம் என்ற ஒழுங்கமைவை ஏற்றுக் கொண்டு அதை வலியுறுத்தி திரைக்கதை அமைப்பதால், அது குறித்து எந்த ஒரு ஆட்சேபணையுமின்றி, அனுமதிக்கின்றனர். அதை தங்களை மெச்சி விட்டதாக நினைத்து, இன்னும் விழிப்புறாத பெண்கள் மிகுந்த ஆதரவு தந்து, தங்களைத் தாங்களே அவமதித்துக் கொள்கின்றனர். கண்ணடைத்துக் கிடக்கும் பெண்களே, சமூகத்தின் நலன் விரும்பிகள் என்ற சித்தாந்தில் எல்லாம் சுமூகமாகவே இருக்கிறது. யாராவது பெண்கள், அதையும் மீறி, செயல்படவோ, சிந்திக்கவோ, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவோ முனைந்தால், அவர்களை எதிரியாகப் பாவித்துப் போராடுகின்றனர்.
விதவைகளின் நிலை இன்று பெருமளவில் மாறிவிட்டது. இந்தக் கதை காலத்திற்கு ஒவ்வாதது. அதனால், இந்தத் திரைபடத்திற்கு இப்பொழுது அவசியம் என்ன வந்து விட்டது என கேட்பவர்கள், விமர்சிப்பவர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். ஜெயா தொலைக்காட்சியில், தினமும் 8.30 மணிக்கு, கிரிஜா என்ற தொடர் ஒன்று வருகிறது. தற்செயலாக, ஒவ்வொரு சேனலாக உலாவிக் கொண்டிருந்த பொழுது, கண்ட ஒரு காட்சி - விதவைகள் விடுதிக்காக, நிதி வசூலிக்க ஒரு பெண் வருகிறார். அவரிடம், நிதி தருவதற்குப் பதிலாக தங்கள் வீட்டிலிருக்கும் விதவைப் பெண்ணை விடுதிக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றே பேரம் பேசுகின்றனர். அதிலும் வயதான பெண்ணாக வரும் பாத்திரம் பேசும் வசனம் - "இந்த தண்டத்தை ஒழித்துக் கட்ட இதைவிட நல்ல சந்தர்ப்பம் இல்லை" இன்றும் விதவைகள் விரும்பப்படாதவர்கள், அவர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற சிந்தையுடையவர்கள் இருக்கத் தான் செய்கின்றனர் - அத்தகைய நிகழ்வுகள் நடக்கத் தான் செய்கின்றன.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போன்று, கடந்த தேர்தலின் போது என்ன நடந்தது? 'சோனியா காந்தி பிரதமரானால், என் தலையை மொட்டையடித்து, வெள்ளையுடை அணிந்து, விதவையாகி விடுவேன்' என சுஷ்மா சுவராஜ் பேசினார். அதாவது, அத்தகைய கொடூரமான விதவை வாழ்க்கையை ஒரு தண்டனையாக ஏற்றுக் கொள்வேன் என்ற பொருளில் சுஷ்மா பேசினார். இன்னும் அவரது பார்வையில், ஒரு பெண்ணாக இருந்தும், விதவை என்ற கோலத்தைப் பற்றிய கருத்து இத்தகையது என்னும் பொழுது, இந்தத் திரைப்படம் போல இன்னும் பல திரைப்படங்கள், கேள்வி எழுப்பும் படங்கள் வரத்தான் செய்ய வேண்டும். குறைந்த பட்சம், சுஷ்மா சுவராஜ் போன்ற தலைவிகள் விழிப்படைய. அத்துடன் அவர்களது புரவலர்களான சங் பரிவாரங்களும், சிவ் சேனைகளும், பாரதீய ஜனதா அமைப்புகளும் விழிப்படைய.
Friday, June 8, 2007
Subscribe to:
Posts (Atom)