Friday, January 4, 2008

Planes, Trains And Automobiles = Anbe Sivam

Planes, Trains And Automobiles - அன்பே சிவத்தின் அசல்.

'தேங்க்ஸ் கிவிங்' நாளன்று வீட்டை அடைந்து விட வேண்டுமென்று நீல் பெய்ஜ் (ஸ்டீவ் மார்டின்) கிளம்புகிறான், நியூ யார்க்கிலிருந்து. சென்றடைய வேண்டிய இடம் - சிக்காக்கோ.

பண்டிகைக் கால நெருக்கடி, மோசமான வானிலை ஆகியவற்றால், விமானப் பயணங்கள் சாத்தியமில்லாது போய்விட, ரெய்ல், பஸ், கார், டிரக் என பல வாகனங்களிலும், வழிகளிலும் பயணம் செய்து தன் வீட்டை அடைகிறான்.

வாழ்வின் நிதர்சனங்களுடன் ஒட்டாத நாசூக்கையும், அசூயையும் எப்பொழுதும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் மேல்தட்டைச் சார்ந்த நீல், எல்லா இடத்திலும் இடர்பாடுகளையேச் சந்திக்கிறான். அவனது இடர்பாடுகளையெல்லாம் கடந்து, அவனை சிக்காக்கோ நகரத்திற்கு கொண்டு சேர்க்கிறான், டெல் கிரிஃபித். (ஜான் கேன்டி) எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொண்டு, எல்லாவற்றையும் நேசிக்கும் மனதுடையவன் டெல்.




இருவரும் சந்தித்த பொழுதிலிருந்து - ஒரு டாக்ஸியைப் போட்டியிட்டுக் கைப்பற்றுவதில் நிகழ்ந்த சந்திப்பிலிருந்து, இருவேறு துருவ மனநிலை கொண்ட இருவருக்குமிடையில் ஒவ்வொரு விஷயத்திலும் வேறுபாடுகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும், டெல்லைத் தவிர்க்க விரும்புகிறான் நீல். ஆனால், முடியாது போகின்றது. மீண்டும், மீண்டும் இருவரும் இணைந்து பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகின்றனர். நிர்ப்பந்தத்தினிடையே நிகழும் பயணம் நகைச்சுவையின் உச்சத்தைத் தொடுகிறது பல சமயங்களில்.

அன்பே சிவம் - கதையின் ஆதாரமாகக் கொண்டிருப்பதுவும் இந்தக் கதை தானே? தவிர்க்க முடியாத ஒரு பயணத்தை மேற்கொள்ளும் மாதவனுடன் பயணத்தில் இணைகிறார் கமல். இருவரும் வெவ்வேறு துருவங்கள். நாசுக்கான, எதிலும் ஒட்டாத மாதவன் இன்றைய இளைஞர்களின் பிரதிநிதி. எல்லாவற்றையும் நேசிக்கும், கம்யூனிஸம் பேசும் மூத்தவர்களின் பிரதிநிதி கமல். அன்பே சிவத்திற்கும், Planes, Trains And Automobiles படத்திற்குமிடையேயுள்ள நெருங்கிய ஒற்றுமை - முரன்படும் அகத்தினுடைய இருவர் சந்தர்ப்பவசத்தால் ஒரு பயணத்தின் மூலம் இணைக்கப்படுகின்றனர். அவர்களது மோதல்கள் ஒரு புறம் நகைச்சுவையை வெடித்துக் கிளப்பினாலும் மனிதர்களின் முரண்பாடுகளுக்கிடையிலும், ஒருவரை ஒருவர் நேசிக்க, சிநேகிக்க அநேக காரணங்களிருக்கின்றன என்பதை வெளிக் கொண்டு வரும் முயற்சி தான்.

மனிதநேயத்தை முன்வைத்து பேசும் இந்தக் கதை ஆங்கிலத்திலும், தமிழிலும் எப்படி கையாளப்பட்டிருக்கிறது? சினிமாவின் விதிகள் இங்கே தான் முற்றிலும் வேறுபடுகிறது.


அன்பே சிவத்தின் மொழி - உபதேசங்கள். கமல், மாதவன் இடையே ஆரம்பத்தில் இயல்பான மோதல்களாக வெளிப்பட்ட உரையாடல்கள் பின்னர் விவாதங்களாகி போதனை செய்கின்றன - அப்பட்டமாக. தர்ம நியாயங்களைப் பற்றிய போதனைகளாக மாறுகிறது. பல கிளைக்கதைகள், உபகிளைகள் முளைவிடுகின்றன. ஏன், சந்தான பாரதி கூட ஒரு கதை சொல்கிறார். கமலுக்குக் காதலி முளைக்கிறார். கமலை ஒருதலையாகக் காதலிக்கிறாள் ஒரு பெண். என்ன ஒரு ஆண்மை! பல பெண்கள் விரும்பும் நாயகனாக! பல்கலை வித்தகனாக மாற்றப்படுகிறான். முதலாளி, தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள் திணிக்கப்படுகிறது. நாயகன் மீது பரிவு தோன்றுவதற்காக விபத்து, ஊனம் என ஏகப்பட்ட இடைச்செருகல்கள் - கதையின் போக்கை இழுத்து நிறுத்தி விடுகின்றன. பயண அனுபவங்கள் பயணம் நிகழும் வேகத்திலேயே அமைய வேண்டாமா?




கதையின் பாத்திரங்களை அதனதன் போக்கில் இயங்க அனுமதித்து, அதிலிருந்து பார்வையாளனனின் அனுபவத்திற்கு, சினிமா மொழியை விட்டுச் சென்றால் என்ன? இன்று தமிழில், வாசக அனுபவத்தை துளிர்க்கச் செய்யும், வாசிப்பில் ஈடுபடச் செய்யும் எழுத்துகள் தோன்றிவிட்டன - கவிதைகளாக, சிறுகதைகளாக, குறுநாவலாக, புதினங்களாக. ஆனால் சினிமா மட்டும் தான் இன்னமும், அம்மா என்றால் அன்பு, அன்பு என்றால் சிவம் என்று பாடம் சொல்லிக் கொண்டு இருக்கின்றது. இவ்வாறு சொல்ல முனைவதாலயே ' the cinematic experience' கிட்டாது, ஒரு உபதேச கச்சேரிக்குப் போய்வந்த களைப்பையேத் தருகிறது நமது திரைப்படங்கள்.

இவைதாம் தமிழ்படங்களின் பலவீனமாக அமைகின்றன. நாயக தகுதிகளை வலிந்து நுழைத்தல். அதாவது மெனக்கெடுத்து சொல்லுதல். எங்கும் எதுவும் இயல்பாக நடப்பதில்லை. எல்லாவற்றையும் முனைப்புடன் சொல்கிறார்கள் - சொல்கிறார்கள் - சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பாத்திரங்களின் இயக்கத்திலிருந்து வினையைப் புரிந்து கொள்ளுவதை பார்வையாளனின் அனுபவத்திற்கு விடுவதில்லை. படைப்பைப் பற்றிய உள்முக விசாரணைகளுக்கெல்லாம் வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. நாங்கள் திரைப்படம் என்று தந்தவற்றைப் பார்த்தாயல்லாவா - அத்துடன் நிறுத்திக் கொள் என்ற ஆணவம் தான் நமது சினிமாக்கள் பேசும் மொழி.

ஒரு நல்ல திரைப்படமாக அமைந்திருக்க வேண்டிய படம் - அன்பே சிவம். நடுவே தமிழ் சினிமாவின் மொழியைப் பேச விரும்பி ஒரு காதல் கதையைத் திணித்த பொழுது படம் சவ்வாகிப் போனது. அதுவும் முதலாளி தொழிலாளி போராட்டத்திற்கிடையே சிக்கிய அரதப் பழசான காதல் கதை. தேவையற்றது. ஆனால், அன்பைப் பற்றிப் பேசும் படத்தில் காதல் இல்லையென்றால் எப்படி? ஒரு வரியில், ஒரே ஒரு வரியில் அந்தக் காதலைச் சொல்லி முடித்திருக்கலாம். அத்தனை நீளமான இடைச்செருகல் காட்சி பயண வேகத்தை முற்றிலுமாக தடைப்படுத்தி விடுகிறது.

ஆங்கிலப்படத்தில், இத்தகையத் தடைகள் இல்லாமல், ஒரு இலக்கை நோக்கிக் கதை நகர்கிறது. The film is focussed. இடைச்செருகல்கள் கிடையாது. தங்கள் மனைவியரைப் பற்றி ஒரே ஒரு வசனத்தின் மூலமே பேசுகின்றனர். தங்கள் மனைவியின் மீதிருக்கும் அன்பை மதுக்கின்னத்தை உயர்த்தி 'சியர்ஸ்' சொல்லுவதோடு நிறுத்திக் கொள்கின்றனர். அதுவே, போதுமானதாக இருக்கிறது. மோதல் - காதல் - பாடல் - ஓடிப்போதல் என்றெல்லாம் பக்கவாட்டில் பயணிக்கவில்லை. எந்த ஒரு படைப்புக்கும் இந்த 'focussing to the point' அவசியமானதாக இருக்கிறது.

கமல், மாதவன் - இருவேறு துருவ நிலையிலும் ஒரு பொதுவான தளத்தில், வேற்றுமைகளுக்கிடையிலும் ஒருவர் மீது ஒருவர் நேசம் கொள்ள இயலும் என்ற இலக்கைத் தவற விட்டுவிட்டு, மனிதர்கள் அனைவரும், ஏற்றத்தாழ்வுகளற்ற நிலையில் அன்பு கொள்ள வேண்டும் - கடவுள் யார்? எப்படி கடவுளை உணர வேண்டும் என்றெல்லாம் போதிக்க ஆரம்பித்துவிடுகிறது. கடவுள் என்றால் என்ன என்று தத்துவார்த்தமான விளக்கங்கள் தந்த இடத்திலாவது நிறுத்திக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால், முன்னால் பாதியில் விடப்பட்ட அந்தப் பெண்ணின் கதையை திருப்தியுறச் சொல்லியாக வேண்டும் என்று மீண்டும் நீட்டி, முழக்கி - பாவம், படத்திற்கு ஒரு நல்ல எடிட்டர் கிடைக்காமல் போய்விட்டாரெனத் தோன்றுகிறது.

போதிப்பது ஆபத்தானது. எல்லோரும் எல்லா சமயத்திலும் போதிப்பதை ஏற்றுக் கொள்வதில்லை. திரைப்படத்தின் இலக்கும் போதிப்பதாக இருக்கக் கூடாது. எந்த ஒரு கலையும் போதிப்பதற்காகப் படைக்கப்படவில்லை. படைப்பும், கலையும் பதிவு செய்வதை மட்டும் செய்து கொண்டு மீதியை பார்ப்பவர்களின் புரிதலுக்கு விட்டுவிடுவதே திரைப்படம் பார்ப்பதை ஒரு அனுபவமாக மாற்றி, தன்னுள்ளே பார்வையாளனை ஒன்றச் செய்யும். இல்லையென்றால், திரைப்படங்கள் வெறும் பிரச்சாரங்களாக மாறி பார்வையாளனை அந்நியப்படுத்தி விடக்கூடும். பின்னர் அவர்களை பிடிப்பதற்காக, அய்ட்டங்களை வைத்துக் கொண்டு, ரசிகர்களைப் பற்றிய குறைபாடுகளைக் கூறி ஒப்பாரி வைத்துக் கொள்ளலாம்.

Tuesday, January 1, 2008

Santhosh Sivan's "The Terrorist"


தான் அனுபவித்த நிகழ்வுகளின் மீதான விமர்சனமே படைப்புகளாக வெளிவருகின்றது. ஒரு மரணமெழுப்பிய பாதிப்புகளை புனைவாக மாற்றி -அடையாளங்களனைத்தையும் ஒதுக்கி, ஒரு ஒற்றை வினையின் மீதான விமர்சனமாக படைக்கப்பட்டிருக்கிறது The Terrorist.

காலநகர்வுகளில் எந்தவொரு வினையும் தனித்து ஒற்றையாக நிகழ்வதில்லை. ஒவ்வொரு வினையும் தனக்கான உந்து சக்தியை பிற வினைகளின் நிகழ்வுகளிலிருந்தே பெறுகிறது. ஒரு ஒற்றை வினையை விமர்சிக்கும் பொழுது, அதனைப் பாதித்த பிற வினைகளின் தன்மையையும் சேர்த்தே விவாதிக்க வேண்டும். இங்கு பிற வினைகளின் மீதான பார்வைகள் விலக்கப்பட்டு இதுதான் - இவர்கள் தான் தீவிரவாதிகள் என தன் மனதில் தோன்றிய பிம்பங்களையும், சித்திரங்களையும் தருகிறார். அதிகார மையத்தின் சிந்தனைத் தளம், அதன் செயல்பாட்டுத் தளம் வழியாகவே எதிர்க்கும் போராட்டம் தீவிரவாதமாக அவதானிக்கப்படுகிறது. முன்முடிவுகளால் எழுப்பப்பட்ட பிம்பங்கள், புகட்டப்பட்ட பொதுப்புத்தி இவற்றைக் கொண்டு தங்கள் உரிமைகளுக்காக ஆயுதமேந்தியவர்களின் வாழ்க்கைப் போராட்டம் தீவிரவாதம் என கட்டமைக்கப்படுகிறது.




தான் நம்பும் தத்துவத்தினைத் தூக்கிப் பிடிக்கும் சக்திகளின் இணக்கமான அரவணைப்பின் பாதுகாப்பை ருசித்தவாறு அவற்றிலிருந்து விடுபடத் துடிக்கும் எதிரணி போராளிகளின் வாழ்க்கையை விமர்சிக்கும் படைப்பின் பிரதியைப் பற்றிய பார்வையிது.

மழை எடுத்து வந்த பச்சை ஈரத்தின் இருள் கவிழும் தினமொன்றில் துரோகி ஒருவனுக்குத் தண்டனை நிறைவேற்றும் காட்சியொன்றுடன் தீவிரவாதியைப் பற்றிய பார்வைகள் பேசத் துவங்குகின்றன. துரோகத்தை வேரறுக்கும் உறுதிமிக்கவளாக அவளது பயணம் துவங்குகிறது. அடுத்தடுத்த காட்சிகளில், போராளிகளைப் பற்றிய எதிர்மறை கருத்தாக்கங்களுக்கு வித்திடும் காட்சிகள் கொண்டு கதையின் தளம் கட்டமைக்கப்படுகிறது. பெண்களும், சிறுவர்களும் போர் முனையில் இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். மற்றவர்களின் இருத்தல் பின்னணியில் குரலின் மூலமாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது. போராட்டங்களின் களத்தில் சிந்திக்கத் திறனற்றவர்கள் இயங்க, அவர்களை ஆட்டுவிக்கும் மூளை களத்தில் இயங்காது விலகி பாதுகாப்புத் தளங்களில் இருந்து ஆணைகள் பிறப்பிக்கிறது என்ற கதைக்களம் கட்டமைக்கப்படுகிறது. போராளிகள் விரும்பப்படாதவர்கள் - தீயவர்கள் - அவர்கள் தீவிரவாதி என்றே பார்க்கப்பட வேண்டும் என்ற முன்முடிவுடன் தான் அணுகுகிறார்கள்.

துப்பாக்கிகள், குண்டுவெடிப்புகள், நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து வெடிக்கும் குரூர காட்சிகள் என கதாநாயகி ஈரமற்ற மனதுடையவளாகத் தொடர்காட்சிகள் பதியப்படுகையிலே, காயம் பட்ட வீரன் ஒருவனுடன் உடலுறவு கொள்கிறாள். பின்னர் நிகழும் கதையின் அடிப்படை ஆதாரமாக விளங்கப் போகும் இந்த ஒரு புள்ளியில் கதை நாயகி தன் திடமனது, குரூரம், கடமையுணர்வு இவையனைத்தையும் எந்த ஒரு தேவையுமற்ற துறத்தலில், மரணம் அரவணைத்துக் கொண்டிருக்கும் ஒரு அறிமுகமற்றவனுடன் உறவு கொள்கிறாள் என்ற காட்சி சாத்தியக் கூறற்ற நிகழ்வுகளைக் கொண்ட ஒரு புனைவு. மரணத்தின் மனதில் நிழலாடக்கூடிய பல நிகழ்வுகள் உடைத்தெழுந்து கிளம்பிப் பரவி கடும்புனலில் சிக்கிவிட்ட ஒற்றை இலைபோல் அலைக்கழிக்கப்பட்டு, அடித்துச் செல்லப்படும் நிலையில், ஒரு போராளிக்கு உடலுறவு கொள்ளும் கிளர்ச்சி எழுகிறது என்பதும், அறிமுகமற்ற நிலையில் ஒரு பெண் அந்த உறவிற்கு இணங்குகிறாள் என்பதும் போராளி மற்றும் பெண்மையைக் கொச்சைப்படுத்துதலின் உச்சமேயன்றி, நியாயமான புனைவல்ல.

இந்த முரண்புனைவை, வலிந்து திட்டமிட்டு போராளிகளின் பிம்பங்களை சிதைவுக்குள்ளாக்க எத்தனிக்கும் காட்சியாகத் தான் பார்க்க முடிகிறது. கதையின் தளம் பலவீனமான, போலியான கற்பனைகளின் மீது அமைக்கப் பட்டதும் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது.

'தலைவர்' தேர்ந்தெடுக்கிறார் - சிந்திக்கும் திறனுடைய ஒரு வெடிகுண்டாக. 'விஐபி' ஒருவரைத் தீர்த்துக் கட்ட. போராளிகளைப் பற்றிய புனைவுகளை விட்டு விட்டு, ஒரு புதிய தளத்தில் கதை பயணிக்கிறது. வாழ்க்கையின் உன்னதங்களை விவாதிக்கிறது. நேசித்தலின் சக்தி குறித்து தர்க்கங்கள் - எளிமையான மொழியில் வெளிப்படுகிறது. விவசாயின் குடும்பம் அவளுக்கு தங்க இடம் கொடுக்கிறது. மனித வெடிகுண்டுகளுக்கான திட்டமிடல்களுக்கிடையே, விவசாயினுடைய உரையாடல்கள் அவரது குடும்ப பின்னணி, சோகத்தினிடையே அவரின் வாழ்வின் மீதான தளராத நம்பிக்கைகள், இவற்றினிடையே பலவித உணர்ச்சிகளுக்கும் ஆட்பட்டு அழுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறாள். வந்த நான்கு நாட்களில் திட்டம் நிறைவேறியாக வேண்டும். மூன்றாம் நாளிலே தான் தாய்மையை நோக்கிய பயணத்தில் இருக்கிறோம் என்பதை அறிகிறாள்.

கோமாவில் வீழ்ந்து விட்ட தன் மனைவி எழுந்து வருவாள் என்ற நம்பிக்கையுடன் இயங்கிக் கொண்டிருக்கிறார், விவசாயி. விருட்சமாவோம் என்ற நம்பிக்கையுடனிருக்கும் விதையின் கனவுகளை சொல்லி அவளுடைய மனதில் விருட்சத்தின் கனவுகளை விதைக்கிறார், தன் வயிற்றினுள் வளர்ந்து கொண்டிருக்கும் விருட்சத்தின் கனவுகளைத் தடவிப் பார்த்துப் பரவசமடைகிறாள். அடுத்த முனையில், தலைவரின் ஆணைகளை விளக்கிச் சொல்லிக் கொண்டே இருக்கிறான் பெருமாள். இறந்து போன அண்ணனின் மரணத்தை நினைவு கூர்கிறான். மக்களின் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளை அவளது மரணம் நிறைவேற்றும் என தியாகத்தின் பெருமைகளைப் பற்றிப் பேசுகிறான். உலகம் முழுவதும் அவளது செயல் பேசப்படும் என பெருமிதம் கொள்ள வைக்கிறான்.

இரண்டு வித கனவுகள் அவளுள் ஒரே சமயத்தில் எழுந்து விருட்சமாகப் போட்டியிடுகின்றன. உலகைப் பார்த்தேயிராத ஒரு கனவு. உலகத்தை வெற்றி கொள்ளப் போராடும் ஒரு கனவு.

அந்தப் பக்கமா? இந்தப் பக்கமா? தீர்மானிக்க இயலாத போராட்டத்தின் அலைக்கழிப்பில் பேதலித்துக் கொண்டிருக்கிறாள். இறுதியில் தியாகமே பெரிதாக கொலைக்களத்தில் விஐபியை சந்திக்கச் செல்கிறாள். போய்வருகிறேன் என்று சொல்லிக் கொள்ள உறவுகளற்ற அவள், கோமாவில் கிடக்கும் அந்தப் பெண்மணியிடம் சொல்கிறாள். "நான் போகிறேன்" அந்தப் பெண்ணின் கைகளுக்குள் தன் கைகளைத் திணித்துக் கொண்டே விடைபெறும் சொல் பகர்கிறாள். ஏழு வருடத்திற்கு முன்பு மகனின் மரணத்தால் கோமாவிடம் செயலற்று முடங்கிப் போய்விட்ட தாய்மை மெதுவாக விழித்துக் கொள்கிறது. கண்ணீர் விடுகிறது. தாய்மையின் சக்தியைத் திரட்டி அவளது கைகளை வலிவற்ற மென்மையுடன் பற்றிக் கொள்கிறது. அவள் கைகளை விடுவித்துக் கொள்கிறாள். தாய்மையின் விழிப்பு அவளுள் எழுவதை தவிர்க்க இயலாதவளாய் கொலைபடும் மனிதனைச் சந்திக்கிறாள். மாலை அணிவிக்கிறாள். புன்னகைக்கிறாள். வணக்கம் சொல்கிறாள். பணிவுடன் கால்களைத் தொடுகிறாள்.

பின் வெடிகுண்டை இயக்கவா, வேண்டாமா என்ற போராட்டம். வெடிகுண்டு சிந்திக்கிறது. A thinking human bomb! போராடித் தோற்கிறாள். அவளுள் விழித்தெழுந்த தாய்மையை ரோஜாவின் மெல்லிய இதழ்கள் அலங்கரிக்கின்றன.

தாய்மை விழித்துக் கொள்ளும் பொழுது, தீவிரவாதம் மடிகிறது என்பதைச் சொல்ல வந்த கதையின் பின்னணி இந்த நோக்கத்திற்கு முற்றிலுமாக மாறுபட்ட கோணத்தில் அமையப் பெற்றதனால், சிதைவுற்ற எதார்த்தத்தைத் தான் காண முடிகிறது.

கதையின் சறுக்கலை, படத்தின் அழகியியல் காட்சிகள் தீர்த்து வைக்கின்றன. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு, செயற்கை ஒளி விலக்கி, இயற்கையின் இயல்பைப் பதிவு செய்கிறது. மழையும், அருவியும் மனிதர்களிடத்தில் குறைந்து காணப்படும் ஈரத்தை படத்தின் முற்பகுதியில் அள்ளி இறைக்கிறது. வாழ்வைப் பற்றிய நம்பிக்கை நிறைந்த பிற்பகுதியில், மழை பெய்யவில்லை. மனதின் இண்டுஇடுக்கெல்லாம் ஈரம் பரவிப் பாய்கிறது. ஒளியும் ஒளியற்ற நிலையும் பதியப்படுகையிலே, நாயகியான மல்லியின் முகம் நெருங்கியும், விலகியும் திரை முழுவதும் இருண்டும் பிரகாசித்தும் இம்சிக்கிறது பார்வையாளனின் மனதை. Those haunting eyes!!!

மல்லியாக நடித்த ஆயேஷா தர்க்கார், அழகு. சூழலின் இயல்புடன் பொருந்திப் போகும் முகம்.

ஒரு போராளியாய் எந்த உணர்வுகளையும் அடையாளப்படுத்தாத முகத்தை ஆரம்பித்த பொழுதுகளில் காட்டிய அவர், பின் அதை தாய்மையின் பாசத்திற்கும், ஒரு போராளியின் மூர்க்கத்திற்குமிடையே நிகழும் போராட்டத்திற்கான முகமாகக் காட்டுகிறார். மிகைப்படுத்தாத முக அசைவுகள், உடல் அசைவுகள் கச்சிதமாக வெளிப்படுகிறது அவரிடமிருந்து.

குறைந்த திட்டச்செலவு படமாக இருந்தாலும், படத்தில் அந்தக் குறைபாடுகள் எந்த அளவிலும் கூட தெரியாதிருப்பது, இயக்குநரின் திறமை. ஒரு போராட்ட களம் எப்பொழுதுமே வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை நிறைந்த படைப்புகளை வெளிக் கொண்டு வரும் - அந்தப் போராட்டக் களத்தில் அடிபட்டு எழுந்த சமூகத்திலிருந்து வெளிவரும் படைப்பாளிகளிடமிருந்து.

நிறுவனமான அரசுகளை எதிர்க்கும் சித்தாந்தங்களைக் கொண்ட அனைவரும் தீவிரவாதிகள் என்ற பொதுப்புத்தி மட்டுமே துணை கொண்டு படைக்கும் எவையும் குறைப்பிரசவமாகத் தான் முடியும். ஒரு தரப்பு நியாயம் பற்றி மட்டுமே பேசுகிறது கதை. எதிர் தரப்பைக் குறைத்து மதிப்பீடு செய்யும் விமர்சனப் பார்வைகள், இனியாவது தீவிரவாதிகள் என்று தான் நம்புபவர்களுக்கும் நியாயபூர்வமான தேவைகள் இருக்கும் என்று பார்க்கத் தொடங்கினால் மட்டுமே படைப்பின் நேர்மை வெளிப்படும்.

வசதியான சாய்வு நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு, தன் உலகத்திலிருந்து அடுத்தவர்களின் உலகை ஏளனம் பேசிக் கொள்ளலாம். ஆனால், வாழ்க்கை தன் உயிர்த்துடிப்பை வெளிப்படுத்துவது சாய்வு நாற்காலி படைப்பாளிகளிடமிருந்தல்ல. போராளிகளைக் கொச்சைப்படுத்தும் முனைப்பில், படைப்பாக வெளிப்பட்ட திரைப் படம் - அதன் பலங்களையும் மீறி.