
தான் அனுபவித்த நிகழ்வுகளின் மீதான விமர்சனமே படைப்புகளாக வெளிவருகின்றது. ஒரு மரணமெழுப்பிய பாதிப்புகளை புனைவாக மாற்றி -அடையாளங்களனைத்தையும் ஒதுக்கி, ஒரு ஒற்றை வினையின் மீதான விமர்சனமாக படைக்கப்பட்டிருக்கிறது The Terrorist.
காலநகர்வுகளில் எந்தவொரு வினையும் தனித்து ஒற்றையாக நிகழ்வதில்லை. ஒவ்வொரு வினையும் தனக்கான உந்து சக்தியை பிற வினைகளின் நிகழ்வுகளிலிருந்தே பெறுகிறது. ஒரு ஒற்றை வினையை விமர்சிக்கும் பொழுது, அதனைப் பாதித்த பிற வினைகளின் தன்மையையும் சேர்த்தே விவாதிக்க வேண்டும். இங்கு பிற வினைகளின் மீதான பார்வைகள் விலக்கப்பட்டு இதுதான் - இவர்கள் தான் தீவிரவாதிகள் என தன் மனதில் தோன்றிய பிம்பங்களையும், சித்திரங்களையும் தருகிறார். அதிகார மையத்தின் சிந்தனைத் தளம், அதன் செயல்பாட்டுத் தளம் வழியாகவே எதிர்க்கும் போராட்டம் தீவிரவாதமாக அவதானிக்கப்படுகிறது. முன்முடிவுகளால் எழுப்பப்பட்ட பிம்பங்கள், புகட்டப்பட்ட பொதுப்புத்தி இவற்றைக் கொண்டு தங்கள் உரிமைகளுக்காக ஆயுதமேந்தியவர்களின் வாழ்க்கைப் போராட்டம் தீவிரவாதம் என கட்டமைக்கப்படுகிறது.

தான் நம்பும் தத்துவத்தினைத் தூக்கிப் பிடிக்கும் சக்திகளின் இணக்கமான அரவணைப்பின் பாதுகாப்பை ருசித்தவாறு அவற்றிலிருந்து விடுபடத் துடிக்கும் எதிரணி போராளிகளின் வாழ்க்கையை விமர்சிக்கும் படைப்பின் பிரதியைப் பற்றிய பார்வையிது.
மழை எடுத்து வந்த பச்சை ஈரத்தின் இருள் கவிழும் தினமொன்றில் துரோகி ஒருவனுக்குத் தண்டனை நிறைவேற்றும் காட்சியொன்றுடன் தீவிரவாதியைப் பற்றிய பார்வைகள் பேசத் துவங்குகின்றன. துரோகத்தை வேரறுக்கும் உறுதிமிக்கவளாக அவளது பயணம் துவங்குகிறது. அடுத்தடுத்த காட்சிகளில், போராளிகளைப் பற்றிய எதிர்மறை கருத்தாக்கங்களுக்கு வித்திடும் காட்சிகள் கொண்டு கதையின் தளம் கட்டமைக்கப்படுகிறது. பெண்களும், சிறுவர்களும் போர் முனையில் இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். மற்றவர்களின் இருத்தல் பின்னணியில் குரலின் மூலமாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது. போராட்டங்களின் களத்தில் சிந்திக்கத் திறனற்றவர்கள் இயங்க, அவர்களை ஆட்டுவிக்கும் மூளை களத்தில் இயங்காது விலகி பாதுகாப்புத் தளங்களில் இருந்து ஆணைகள் பிறப்பிக்கிறது என்ற கதைக்களம் கட்டமைக்கப்படுகிறது. போராளிகள் விரும்பப்படாதவர்கள் - தீயவர்கள் - அவர்கள் தீவிரவாதி என்றே பார்க்கப்பட வேண்டும் என்ற முன்முடிவுடன் தான் அணுகுகிறார்கள்.
துப்பாக்கிகள், குண்டுவெடிப்புகள், நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து வெடிக்கும் குரூர காட்சிகள் என கதாநாயகி ஈரமற்ற மனதுடையவளாகத் தொடர்காட்சிகள் பதியப்படுகையிலே, காயம் பட்ட வீரன் ஒருவனுடன் உடலுறவு கொள்கிறாள். பின்னர் நிகழும் கதையின் அடிப்படை ஆதாரமாக விளங்கப் போகும் இந்த ஒரு புள்ளியில் கதை நாயகி தன் திடமனது, குரூரம், கடமையுணர்வு இவையனைத்தையும் எந்த ஒரு தேவையுமற்ற துறத்தலில், மரணம் அரவணைத்துக் கொண்டிருக்கும் ஒரு அறிமுகமற்றவனுடன் உறவு கொள்கிறாள் என்ற காட்சி சாத்தியக் கூறற்ற நிகழ்வுகளைக் கொண்ட ஒரு புனைவு. மரணத்தின் மனதில் நிழலாடக்கூடிய பல நிகழ்வுகள் உடைத்தெழுந்து கிளம்பிப் பரவி கடும்புனலில் சிக்கிவிட்ட ஒற்றை இலைபோல் அலைக்கழிக்கப்பட்டு, அடித்துச் செல்லப்படும் நிலையில், ஒரு போராளிக்கு உடலுறவு கொள்ளும் கிளர்ச்சி எழுகிறது என்பதும், அறிமுகமற்ற நிலையில் ஒரு பெண் அந்த உறவிற்கு இணங்குகிறாள் என்பதும் போராளி மற்றும் பெண்மையைக் கொச்சைப்படுத்துதலின் உச்சமேயன்றி, நியாயமான புனைவல்ல.
இந்த முரண்புனைவை, வலிந்து திட்டமிட்டு போராளிகளின் பிம்பங்களை சிதைவுக்குள்ளாக்க எத்தனிக்கும் காட்சியாகத் தான் பார்க்க முடிகிறது. கதையின் தளம் பலவீனமான, போலியான கற்பனைகளின் மீது அமைக்கப் பட்டதும் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது.
'தலைவர்' தேர்ந்தெடுக்கிறார் - சிந்திக்கும் திறனுடைய ஒரு வெடிகுண்டாக. 'விஐபி' ஒருவரைத் தீர்த்துக் கட்ட. போராளிகளைப் பற்றிய புனைவுகளை விட்டு விட்டு, ஒரு புதிய தளத்தில் கதை பயணிக்கிறது. வாழ்க்கையின் உன்னதங்களை விவாதிக்கிறது. நேசித்தலின் சக்தி குறித்து தர்க்கங்கள் - எளிமையான மொழியில் வெளிப்படுகிறது. விவசாயின் குடும்பம் அவளுக்கு தங்க இடம் கொடுக்கிறது. மனித வெடிகுண்டுகளுக்கான திட்டமிடல்களுக்கிடையே, விவசாயினுடைய உரையாடல்கள் அவரது குடும்ப பின்னணி, சோகத்தினிடையே அவரின் வாழ்வின் மீதான தளராத நம்பிக்கைகள், இவற்றினிடையே பலவித உணர்ச்சிகளுக்கும் ஆட்பட்டு அழுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறாள். வந்த நான்கு நாட்களில் திட்டம் நிறைவேறியாக வேண்டும். மூன்றாம் நாளிலே தான் தாய்மையை நோக்கிய பயணத்தில் இருக்கிறோம் என்பதை அறிகிறாள்.
கோமாவில் வீழ்ந்து விட்ட தன் மனைவி எழுந்து வருவாள் என்ற நம்பிக்கையுடன் இயங்கிக் கொண்டிருக்கிறார், விவசாயி. விருட்சமாவோம் என்ற நம்பிக்கையுடனிருக்கும் விதையின் கனவுகளை சொல்லி அவளுடைய மனதில் விருட்சத்தின் கனவுகளை விதைக்கிறார், தன் வயிற்றினுள் வளர்ந்து கொண்டிருக்கும் விருட்சத்தின் கனவுகளைத் தடவிப் பார்த்துப் பரவசமடைகிறாள். அடுத்த முனையில், தலைவரின் ஆணைகளை விளக்கிச் சொல்லிக் கொண்டே இருக்கிறான் பெருமாள். இறந்து போன அண்ணனின் மரணத்தை நினைவு கூர்கிறான். மக்களின் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளை அவளது மரணம் நிறைவேற்றும் என தியாகத்தின் பெருமைகளைப் பற்றிப் பேசுகிறான். உலகம் முழுவதும் அவளது செயல் பேசப்படும் என பெருமிதம் கொள்ள வைக்கிறான்.
இரண்டு வித கனவுகள் அவளுள் ஒரே சமயத்தில் எழுந்து விருட்சமாகப் போட்டியிடுகின்றன. உலகைப் பார்த்தேயிராத ஒரு கனவு. உலகத்தை வெற்றி கொள்ளப் போராடும் ஒரு கனவு.
அந்தப் பக்கமா? இந்தப் பக்கமா? தீர்மானிக்க இயலாத போராட்டத்தின் அலைக்கழிப்பில் பேதலித்துக் கொண்டிருக்கிறாள். இறுதியில் தியாகமே பெரிதாக கொலைக்களத்தில் விஐபியை சந்திக்கச் செல்கிறாள். போய்வருகிறேன் என்று சொல்லிக் கொள்ள உறவுகளற்ற அவள், கோமாவில் கிடக்கும் அந்தப் பெண்மணியிடம் சொல்கிறாள். "நான் போகிறேன்" அந்தப் பெண்ணின் கைகளுக்குள் தன் கைகளைத் திணித்துக் கொண்டே விடைபெறும் சொல் பகர்கிறாள். ஏழு வருடத்திற்கு முன்பு மகனின் மரணத்தால் கோமாவிடம் செயலற்று முடங்கிப் போய்விட்ட தாய்மை மெதுவாக விழித்துக் கொள்கிறது. கண்ணீர் விடுகிறது. தாய்மையின் சக்தியைத் திரட்டி அவளது கைகளை வலிவற்ற மென்மையுடன் பற்றிக் கொள்கிறது. அவள் கைகளை விடுவித்துக் கொள்கிறாள். தாய்மையின் விழிப்பு அவளுள் எழுவதை தவிர்க்க இயலாதவளாய் கொலைபடும் மனிதனைச் சந்திக்கிறாள். மாலை அணிவிக்கிறாள். புன்னகைக்கிறாள். வணக்கம் சொல்கிறாள். பணிவுடன் கால்களைத் தொடுகிறாள்.
பின் வெடிகுண்டை இயக்கவா, வேண்டாமா என்ற போராட்டம். வெடிகுண்டு சிந்திக்கிறது. A thinking human bomb! போராடித் தோற்கிறாள். அவளுள் விழித்தெழுந்த தாய்மையை ரோஜாவின் மெல்லிய இதழ்கள் அலங்கரிக்கின்றன.
தாய்மை விழித்துக் கொள்ளும் பொழுது, தீவிரவாதம் மடிகிறது என்பதைச் சொல்ல வந்த கதையின் பின்னணி இந்த நோக்கத்திற்கு முற்றிலுமாக மாறுபட்ட கோணத்தில் அமையப் பெற்றதனால், சிதைவுற்ற எதார்த்தத்தைத் தான் காண முடிகிறது.
கதையின் சறுக்கலை, படத்தின் அழகியியல் காட்சிகள் தீர்த்து வைக்கின்றன. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு, செயற்கை ஒளி விலக்கி, இயற்கையின் இயல்பைப் பதிவு செய்கிறது. மழையும், அருவியும் மனிதர்களிடத்தில் குறைந்து காணப்படும் ஈரத்தை படத்தின் முற்பகுதியில் அள்ளி இறைக்கிறது. வாழ்வைப் பற்றிய நம்பிக்கை நிறைந்த பிற்பகுதியில், மழை பெய்யவில்லை. மனதின் இண்டுஇடுக்கெல்லாம் ஈரம் பரவிப் பாய்கிறது. ஒளியும் ஒளியற்ற நிலையும் பதியப்படுகையிலே, நாயகியான மல்லியின் முகம் நெருங்கியும், விலகியும் திரை முழுவதும் இருண்டும் பிரகாசித்தும் இம்சிக்கிறது பார்வையாளனின் மனதை. Those haunting eyes!!!
மல்லியாக நடித்த ஆயேஷா தர்க்கார், அழகு. சூழலின் இயல்புடன் பொருந்திப் போகும் முகம்.

ஒரு போராளியாய் எந்த உணர்வுகளையும் அடையாளப்படுத்தாத முகத்தை ஆரம்பித்த பொழுதுகளில் காட்டிய அவர், பின் அதை தாய்மையின் பாசத்திற்கும், ஒரு போராளியின் மூர்க்கத்திற்குமிடையே நிகழும் போராட்டத்திற்கான முகமாகக் காட்டுகிறார். மிகைப்படுத்தாத முக அசைவுகள், உடல் அசைவுகள் கச்சிதமாக வெளிப்படுகிறது அவரிடமிருந்து.
குறைந்த திட்டச்செலவு படமாக இருந்தாலும், படத்தில் அந்தக் குறைபாடுகள் எந்த அளவிலும் கூட தெரியாதிருப்பது, இயக்குநரின் திறமை. ஒரு போராட்ட களம் எப்பொழுதுமே வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை நிறைந்த படைப்புகளை வெளிக் கொண்டு வரும் - அந்தப் போராட்டக் களத்தில் அடிபட்டு எழுந்த சமூகத்திலிருந்து வெளிவரும் படைப்பாளிகளிடமிருந்து.
நிறுவனமான அரசுகளை எதிர்க்கும் சித்தாந்தங்களைக் கொண்ட அனைவரும் தீவிரவாதிகள் என்ற பொதுப்புத்தி மட்டுமே துணை கொண்டு படைக்கும் எவையும் குறைப்பிரசவமாகத் தான் முடியும். ஒரு தரப்பு நியாயம் பற்றி மட்டுமே பேசுகிறது கதை. எதிர் தரப்பைக் குறைத்து மதிப்பீடு செய்யும் விமர்சனப் பார்வைகள், இனியாவது தீவிரவாதிகள் என்று தான் நம்புபவர்களுக்கும் நியாயபூர்வமான தேவைகள் இருக்கும் என்று பார்க்கத் தொடங்கினால் மட்டுமே படைப்பின் நேர்மை வெளிப்படும்.
வசதியான சாய்வு நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு, தன் உலகத்திலிருந்து அடுத்தவர்களின் உலகை ஏளனம் பேசிக் கொள்ளலாம். ஆனால், வாழ்க்கை தன் உயிர்த்துடிப்பை வெளிப்படுத்துவது சாய்வு நாற்காலி படைப்பாளிகளிடமிருந்தல்ல. போராளிகளைக் கொச்சைப்படுத்தும் முனைப்பில், படைப்பாக வெளிப்பட்ட திரைப் படம் - அதன் பலங்களையும் மீறி.
14 comments:
நீங்கள் கூறிய "மரணம் அரவணைத்துக் கொண்டிருக்கும் ஒரு அறிமுகமற்றவனுடன் உறவு கொள்கிறாள் என்ற காட்சி சாத்தியக் கூறற்ற நிகழ்வுகளைக் கொண்ட ஒரு புனைவு" ஐயே நானூம் இப்படத்தை பல வருடங்களின் (2 என நினைக்கிறேன்) முன்னர் பார்த்தபோதும் நினைத்தேன். முக்கியமாக ஈழத்தவனான எனக்கு இது போராட்டத்தை வெறும் செய்தித்தாழ் ஊடாகப்பார்க்கும் ஒருவனின் பார்வையே நினைவுக்கு கொண்டுவந்தது மட்டுமல்லாது பல தரம் வாய்ந்த இயக்குனர்களும் நாம் அறியாத கலாச்சாரம், நாடு, மக்கள் பற்றி இவ்வாறான புரிதல்களைக் கொண்டிருப்போரோ என ஐயமுறவே வைத்தது.
அது மட்டுமல்ல இன்று புலிகளை முற்று முழுதாக எதிர்க்கும் இயக்க ஆதரவாளர்கள் கூட எள்ளி நகையாடும் கட்சியாக அமைந்திருந்தது!!
கீழ் உள்ள சுட்டியில் குறித்த படம் பார்த்தேன் மிக நன்றாக இருந்தது.
http://www.snitt.no/mdtt/index.htm
விரைவில் டி.வி.டி யில் வர உள்ளதாக படத்தின் இயக்குனர் கூறினார்.
அநாநி,
மிக்க நன்றி.
படைப்புத் தொழில் நேர்மையுடன் செய்யப்பட வேண்டும் - எதிரிகளும் பாராட்டும் வகையில் - இவன் நேர்மையாகத் தான் செய்திருக்கிறான் என்று சொல்லும் வகையில் அமைய வேண்டும்.
அவ்வாறில்லாத பொழுது, எத்தனை தான் அழகூட்டினாலும், மெருகேற்றினாலும், அதன் குறைபாடுகளே பிரதானமாகத் தான் போய்விடுகிறது.
ஒரு நல்ல சினிமா இலக்கணத்தின்படி செய்யப்பட்ட இந்த சினிமா, கதையின் முக்கியத் திருப்பு முனையாக அமைய வேண்டிய இடத்தைக் கொச்சைப்படுத்தியதன் மூலம், பின்பகுதியில் கதையின் இருப்பு கேள்விக்குறியதாகி விட்டது.
நன்றி, உங்கள் பின்னூட்டத்திற்கு.
உங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள்.
அன்புடன்
நண்பன்
இதுவரை இந்தப் படத்தை பார்க்க வாய்க்கவில்லை. இனியாவது பார்க்கவேண்டுமென்ற ஆவல் வந்துள்ளது.
//படைப்பின் பிரதியைப் பற்றிய பார்வையிது//
??? என்றால் என்ன?
உங்கள் எழுத்து மாற்றான ஒரு விமர்சனப்பார்வையை கொண்டுள்ளது
நன்றி
எங்கேனும் தரவிறக்க சுட்டி உள்ளதா?
முபாரக்
நன்றி,
ஒரு படைப்பைப் பற்றிய பல்வேறு பார்வைகள் இருக்கும். ஒரே படைப்பு ஒவ்வொருவரிடத்திலும் மாறுபட்ட பாதிப்புகளை உருவாக்கும். படைத்தவனின் நோக்கம் குறித்து கவலை கொள்வதில்லை. என் படைப்பை இவ்வாறு தான் நோக்க வேண்டும் என்று கேட்க முடியாது.
நான் வாசிக்கும் படைப்பு எனக்குச் சொந்தமானது. அதுபோல், நீங்கள் வாசிப்பது உங்களுக்கு.
ஆகவே தான் - பிரதி என்று சொல்கிறார்கள்.
படம் எங்கே கிடைக்கிறது தரவிறக்கத்திற்கு என்பது எனக்குத் தெரியாது. அநாநி ஒரு தளத்தைக் குறித்து எழுதி இருக்கிறார். முயற்சி செய்யுங்கள்.
என்னுடைய அறிவுரை - முடிந்தால், வாங்கிப் பாருங்கள்.
மிக்க நன்றி...உங்கள் பாராட்டுகளுக்கு
நண்பன், முபாரக்,
நான் குறிப்பிட்ட சுட்டி வேறொரு படம் பற்றியது. இப்படம் ஒர் நோர்வேஜிய பெண்மணியால் எடுக்கப்பட்ட ஆவணப்படம். இது 'தற்கொலை' (தற்கொடை!) ப்போராளிகள் பற்றியது. அவர்களின் உணர்வுகள் போராட்டம் பற்றியது. இப்படன் 'டெரரிஸ்ட்' டின் சினிமாத்தனம் அற்றது.
இப்படத்துடன் என்னால் ஒத்துப்போக முடிந்ததற்கு இன்னொரு காரணம் நான் ஈழத்தைச்சேர்ந்தவன் மட்டுமல்ல ஸ்ரீலங்காவின் நாறி ஒழுகும் 'ஜனநாயகத்தை' உணர்ந்தவன். போராளிகளை தோழர்/தோழிகளாகவும் கொண்டிருந்தவன்.
எனது தெளிவற்ற எழுத்துக்கு மன்னிக்கவும்.
நன்றி, அநாநி - தெளிவு படுத்தியமைக்காக.
விடுமுறை நாளொன்றில் முயற்சித்துப் பார்க்கிறேன்.
முபாரக்,
நீங்கள் துபாயில் இருப்பவராக இருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.
பார்த்து விட்டு திருப்பித் தரலாம்.
Gostei muito desse post e seu blog é muito interessante, vou passar por aqui sempre =) Depois dá uma passada lá no meu site, que é sobre o CresceNet, espero que goste. O endereço dele é http://www.provedorcrescenet.com . Um abraço.
சுமார் இரண்டரை ஆண்டுகளின் முன்னர் இப்படத்தைப் பற்றிய எனது பார்வையை எழுதியிருந்தேன்.
இப்படி எழுதுவதே பயங்கரவாத மனநிலைதான் ;-)
வசந்தன் பக்கம்: "பயங்கர வாதிகள்"- ஒரு கண்ணோட்டம்.
//விரைவில் டி.வி.டி யில் வர உள்ளதாக படத்தின் இயக்குனர் கூறினார்.//
அப்படியா?
ஏற்கனவே வந்துவிட்டதே?
நான் மூன்றரை ஆண்டுகளின் முன்னர் பார்த்திருக்கிறேன். சட்டத்துக்கு முரணாகத் தயாரிக்கப்பட்ட DVD மாதிரித் தெரியவில்லை.
வசந்தன்
ஒரு இயக்கத்தைப் பற்றிய விமர்சங்களை முன் வைக்கும் பொழுது, அவர்களின் நல்லது, கெட்டது என்ற இரண்டையும் தான் அலச வேண்டும். கெட்டதைப் பற்றிப் பேசினால் நீ நல்லவன். ஆனால் அவர்களது நல்லதைப் பற்றிப் பேசினால் நீ கெட்டவன் என்ற பொதுப்புத்தியைக் கொண்டு தான் அரசுகள் இயங்குகின்றன. அதனால், இந்த மாதிரியான எழுத்துகளும் தீவிரவாதமாகத் தான் பார்க்கப்படுகின்றன என்று நீங்கள் சொல்வது சரிதான்.
உங்கள் வலைப்பக்கம் பார்த்தேன். அது நடக்காமல் போயிருந்தால்...? என்று எழுப்பப்படும் ஒரு கேள்வி இக்கட்டானது - நிகழ்வுகளை அது நிகழ்ந்தாவாறே பதிவு செய்ய அஞ்சும் படைப்பாளிகளால்.
ஒரு தீவிரவாத பெண் எவ்வாறு கர்ப்பமடைகிறாள் என்பதையே சரியாக சொல்ல முடியாதவரால், பின் விளைவுகள் குறித்து சிந்திக்கச் சொல்கிறீர்களே, உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா? :-)
ஒரு செயலை ஒருவர் செய்யத் தவறினால், குறுக்கிட்டு, வேறு வகையில், அச்செயலை நிறைவேற்றிட கூடவே துணை ஆட்களும் இருப்பார்கள் என்பதைப் பற்றி அவர் பேசவிரும்பவில்லை.
சிவன் பேசுவதற்கு எடுத்துக் கொண்ட பொருள் - ஒரு பெண்ணின் தாய்மையுணர்வு விழித்துக் கொள்கிறது -கொலை செய்வதினின்றும் விலகிக் கொள்கிறது என்ற கருவைத் தான் அவர் முன்னிலைப்படுத்துகிறார். ஒரு தீவிரவாதியான பெண்ணை எப்படி தாய்மை மென்மைப்படுத்துகிறது என்ற உயரிய கருத்தைப் பற்றி பேச முன்வந்து, அதை எப்படி சொல்வது எனத் தெரியாமல் திணறி, அந்தப் பெண் கருவுற்ற சம்பவத்தையே கேலிக்குரியதாக்கி, பெண்மையை தாழ்வடையச் செய்து, தாய்மையை உயர்த்திப் பேசுகிறார். இந்த முரண்பாட்டைத் தான் சொன்னேன் - நேர்மையற்ற படைப்பாளி என்று.
ஒரு நேர்மையற்ற படைப்பாளியிடமிருந்து வெளிப்படும் விமர்சனம் எப்பொழுதுமே நேர்மையற்றதாகவே இருக்கும். அதுவே, அவரது தீவிரவாதப் பார்வையையும் நேர்மையற்றதாக்கி விட்டது.
எவ்வாறு கர்ப்பமுற்றாள் என்பதை ஆராய்ந்திருந்தால், அவர் தீவிரவாதிகள் என்று குறிப்பிடும் போராளிகள் ஏன் இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர் என்பதைப் புரிந்திருப்பார். ஒன்றின் புரிதல் மற்றொன்றிற்கான வாயிலைத் திறந்திருக்கும்.
உலகம் முழுவதும், தீவிரவாதம் என்ற சொல் விளைவிக்கும் 'negative emotions'ஐ முன்வைத்து, அரைகுறை சிந்தனையுடன் ஆதாயம் தேட முனைந்திருக்கிறார்.
உங்கள் கருத்துடன் எனக்கும் ஒப்புதல் இருக்கிறது வசந்தன்.
நன்றி...
வசந்தன்..////விரைவில் டி.வி.டி யில் வர உள்ளதாக படத்தின் இயக்குனர் கூறினார்.//
நான் குறிப்பிட்டது 'My daughter:The terrorist' என்ற படம் பற்றியது. எனது தெளிவற்ற எழுத்துக்கு மீண்டும் மன்னிப்புக் கோருகிறேன்.
Google video-வில் இப்படம் உள்ளது. விரும்புவோர் பார்க்கலாம்.
Post a Comment