'தேங்க்ஸ் கிவிங்' நாளன்று வீட்டை அடைந்து விட வேண்டுமென்று நீல் பெய்ஜ் (ஸ்டீவ் மார்டின்) கிளம்புகிறான், நியூ யார்க்கிலிருந்து. சென்றடைய வேண்டிய இடம் - சிக்காக்கோ.
பண்டிகைக் கால நெருக்கடி, மோசமான வானிலை ஆகியவற்றால், விமானப் பயணங்கள் சாத்தியமில்லாது போய்விட, ரெய்ல், பஸ், கார், டிரக் என பல வாகனங்களிலும், வழிகளிலும் பயணம் செய்து தன் வீட்டை அடைகிறான்.
வாழ்வின் நிதர்சனங்களுடன் ஒட்டாத நாசூக்கையும், அசூயையும் எப்பொழுதும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் மேல்தட்டைச் சார்ந்த நீல், எல்லா இடத்திலும் இடர்பாடுகளையேச் சந்திக்கிறான். அவனது இடர்பாடுகளையெல்லாம் கடந்து, அவனை சிக்காக்கோ நகரத்திற்கு கொண்டு சேர்க்கிறான், டெல் கிரிஃபித். (ஜான் கேன்டி) எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொண்டு, எல்லாவற்றையும் நேசிக்கும் மனதுடையவன் டெல்.
இருவரும் சந்தித்த பொழுதிலிருந்து - ஒரு டாக்ஸியைப் போட்டியிட்டுக் கைப்பற்றுவதில் நிகழ்ந்த சந்திப்பிலிருந்து, இருவேறு துருவ மனநிலை கொண்ட இருவருக்குமிடையில் ஒவ்வொரு விஷயத்திலும் வேறுபாடுகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும், டெல்லைத் தவிர்க்க விரும்புகிறான் நீல். ஆனால், முடியாது போகின்றது. மீண்டும், மீண்டும் இருவரும் இணைந்து பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகின்றனர். நிர்ப்பந்தத்தினிடையே நிகழும் பயணம் நகைச்சுவையின் உச்சத்தைத் தொடுகிறது பல சமயங்களில்.
அன்பே சிவம் - கதையின் ஆதாரமாகக் கொண்டிருப்பதுவும் இந்தக் கதை தானே? தவிர்க்க முடியாத ஒரு பயணத்தை மேற்கொள்ளும் மாதவனுடன் பயணத்தில் இணைகிறார் கமல். இருவரும் வெவ்வேறு துருவங்கள். நாசுக்கான, எதிலும் ஒட்டாத மாதவன் இன்றைய இளைஞர்களின் பிரதிநிதி. எல்லாவற்றையும் நேசிக்கும், கம்யூனிஸம் பேசும் மூத்தவர்களின் பிரதிநிதி கமல். அன்பே சிவத்திற்கும், Planes, Trains And Automobiles படத்திற்குமிடையேயுள்ள நெருங்கிய ஒற்றுமை - முரன்படும் அகத்தினுடைய இருவர் சந்தர்ப்பவசத்தால் ஒரு பயணத்தின் மூலம் இணைக்கப்படுகின்றனர். அவர்களது மோதல்கள் ஒரு புறம் நகைச்சுவையை வெடித்துக் கிளப்பினாலும் மனிதர்களின் முரண்பாடுகளுக்கிடையிலும், ஒருவரை ஒருவர் நேசிக்க, சிநேகிக்க அநேக காரணங்களிருக்கின்றன என்பதை வெளிக் கொண்டு வரும் முயற்சி தான்.
மனிதநேயத்தை முன்வைத்து பேசும் இந்தக் கதை ஆங்கிலத்திலும், தமிழிலும் எப்படி கையாளப்பட்டிருக்கிறது? சினிமாவின் விதிகள் இங்கே தான் முற்றிலும் வேறுபடுகிறது.
அன்பே சிவத்தின் மொழி - உபதேசங்கள். கமல், மாதவன் இடையே ஆரம்பத்தில் இயல்பான மோதல்களாக வெளிப்பட்ட உரையாடல்கள் பின்னர் விவாதங்களாகி போதனை செய்கின்றன - அப்பட்டமாக. தர்ம நியாயங்களைப் பற்றிய போதனைகளாக மாறுகிறது. பல கிளைக்கதைகள், உபகிளைகள் முளைவிடுகின்றன. ஏன், சந்தான பாரதி கூட ஒரு கதை சொல்கிறார். கமலுக்குக் காதலி முளைக்கிறார். கமலை ஒருதலையாகக் காதலிக்கிறாள் ஒரு பெண். என்ன ஒரு ஆண்மை! பல பெண்கள் விரும்பும் நாயகனாக! பல்கலை வித்தகனாக மாற்றப்படுகிறான். முதலாளி, தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள் திணிக்கப்படுகிறது. நாயகன் மீது பரிவு தோன்றுவதற்காக விபத்து, ஊனம் என ஏகப்பட்ட இடைச்செருகல்கள் - கதையின் போக்கை இழுத்து நிறுத்தி விடுகின்றன. பயண அனுபவங்கள் பயணம் நிகழும் வேகத்திலேயே அமைய வேண்டாமா?
கதையின் பாத்திரங்களை அதனதன் போக்கில் இயங்க அனுமதித்து, அதிலிருந்து பார்வையாளனனின் அனுபவத்திற்கு, சினிமா மொழியை விட்டுச் சென்றால் என்ன? இன்று தமிழில், வாசக அனுபவத்தை துளிர்க்கச் செய்யும், வாசிப்பில் ஈடுபடச் செய்யும் எழுத்துகள் தோன்றிவிட்டன - கவிதைகளாக, சிறுகதைகளாக, குறுநாவலாக, புதினங்களாக. ஆனால் சினிமா மட்டும் தான் இன்னமும், அம்மா என்றால் அன்பு, அன்பு என்றால் சிவம் என்று பாடம் சொல்லிக் கொண்டு இருக்கின்றது. இவ்வாறு சொல்ல முனைவதாலயே ' the cinematic experience' கிட்டாது, ஒரு உபதேச கச்சேரிக்குப் போய்வந்த களைப்பையேத் தருகிறது நமது திரைப்படங்கள்.
இவைதாம் தமிழ்படங்களின் பலவீனமாக அமைகின்றன. நாயக தகுதிகளை வலிந்து நுழைத்தல். அதாவது மெனக்கெடுத்து சொல்லுதல். எங்கும் எதுவும் இயல்பாக நடப்பதில்லை. எல்லாவற்றையும் முனைப்புடன் சொல்கிறார்கள் - சொல்கிறார்கள் - சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பாத்திரங்களின் இயக்கத்திலிருந்து வினையைப் புரிந்து கொள்ளுவதை பார்வையாளனின் அனுபவத்திற்கு விடுவதில்லை. படைப்பைப் பற்றிய உள்முக விசாரணைகளுக்கெல்லாம் வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. நாங்கள் திரைப்படம் என்று தந்தவற்றைப் பார்த்தாயல்லாவா - அத்துடன் நிறுத்திக் கொள் என்ற ஆணவம் தான் நமது சினிமாக்கள் பேசும் மொழி.
ஒரு நல்ல திரைப்படமாக அமைந்திருக்க வேண்டிய படம் - அன்பே சிவம். நடுவே தமிழ் சினிமாவின் மொழியைப் பேச விரும்பி ஒரு காதல் கதையைத் திணித்த பொழுது படம் சவ்வாகிப் போனது. அதுவும் முதலாளி தொழிலாளி போராட்டத்திற்கிடையே சிக்கிய அரதப் பழசான காதல் கதை. தேவையற்றது. ஆனால், அன்பைப் பற்றிப் பேசும் படத்தில் காதல் இல்லையென்றால் எப்படி? ஒரு வரியில், ஒரே ஒரு வரியில் அந்தக் காதலைச் சொல்லி முடித்திருக்கலாம். அத்தனை நீளமான இடைச்செருகல் காட்சி பயண வேகத்தை முற்றிலுமாக தடைப்படுத்தி விடுகிறது.
ஆங்கிலப்படத்தில், இத்தகையத் தடைகள் இல்லாமல், ஒரு இலக்கை நோக்கிக் கதை நகர்கிறது. The film is focussed. இடைச்செருகல்கள் கிடையாது. தங்கள் மனைவியரைப் பற்றி ஒரே ஒரு வசனத்தின் மூலமே பேசுகின்றனர். தங்கள் மனைவியின் மீதிருக்கும் அன்பை மதுக்கின்னத்தை உயர்த்தி 'சியர்ஸ்' சொல்லுவதோடு நிறுத்திக் கொள்கின்றனர். அதுவே, போதுமானதாக இருக்கிறது. மோதல் - காதல் - பாடல் - ஓடிப்போதல் என்றெல்லாம் பக்கவாட்டில் பயணிக்கவில்லை. எந்த ஒரு படைப்புக்கும் இந்த 'focussing to the point' அவசியமானதாக இருக்கிறது.
கமல், மாதவன் - இருவேறு துருவ நிலையிலும் ஒரு பொதுவான தளத்தில், வேற்றுமைகளுக்கிடையிலும் ஒருவர் மீது ஒருவர் நேசம் கொள்ள இயலும் என்ற இலக்கைத் தவற விட்டுவிட்டு, மனிதர்கள் அனைவரும், ஏற்றத்தாழ்வுகளற்ற நிலையில் அன்பு கொள்ள வேண்டும் - கடவுள் யார்? எப்படி கடவுளை உணர வேண்டும் என்றெல்லாம் போதிக்க ஆரம்பித்துவிடுகிறது. கடவுள் என்றால் என்ன என்று தத்துவார்த்தமான விளக்கங்கள் தந்த இடத்திலாவது நிறுத்திக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால், முன்னால் பாதியில் விடப்பட்ட அந்தப் பெண்ணின் கதையை திருப்தியுறச் சொல்லியாக வேண்டும் என்று மீண்டும் நீட்டி, முழக்கி - பாவம், படத்திற்கு ஒரு நல்ல எடிட்டர் கிடைக்காமல் போய்விட்டாரெனத் தோன்றுகிறது.
போதிப்பது ஆபத்தானது. எல்லோரும் எல்லா சமயத்திலும் போதிப்பதை ஏற்றுக் கொள்வதில்லை. திரைப்படத்தின் இலக்கும் போதிப்பதாக இருக்கக் கூடாது. எந்த ஒரு கலையும் போதிப்பதற்காகப் படைக்கப்படவில்லை. படைப்பும், கலையும் பதிவு செய்வதை மட்டும் செய்து கொண்டு மீதியை பார்ப்பவர்களின் புரிதலுக்கு விட்டுவிடுவதே திரைப்படம் பார்ப்பதை ஒரு அனுபவமாக மாற்றி, தன்னுள்ளே பார்வையாளனை ஒன்றச் செய்யும். இல்லையென்றால், திரைப்படங்கள் வெறும் பிரச்சாரங்களாக மாறி பார்வையாளனை அந்நியப்படுத்தி விடக்கூடும். பின்னர் அவர்களை பிடிப்பதற்காக, அய்ட்டங்களை வைத்துக் கொண்டு, ரசிகர்களைப் பற்றிய குறைபாடுகளைக் கூறி ஒப்பாரி வைத்துக் கொள்ளலாம்.