வாழ்க்கையை எதிர்கொள்ளும் போராட்டம் சட்டங்களின் தர்ம நியாயங்களுக்கு அப்பாற்பட்டே இயங்குகிறது. சட்டத்தினால் மறுக்கப்படும் இயக்கங்களினால் மட்டுமே ஒரு சமூகம் குற்றவாளியாகி விடுவதில்லை. மாறாக, சட்டத்தை மீறுபவர்களும் சில தர்ம நியாயங்களுக்குட்பட்டே இயங்குவதும், தங்களுக்குளே அத்தர்மநியாயங்களை மீறும் செய்கைகள் மீறப்படும் ஒவ்வொருவரின் செயலாலும் இயல்பாகவே சமன்பட்டு போய்விடுதலும், அது குறித்து பெருங்கவலை கொள்ளாது மீண்டும் சட்டங்களை மறுத்த தங்கள் தர்மத்திற்குட்பட்டு இயல்பு வாழ்க்கை வாழ முடியும் என்ற பின்னணியிலே, வாழ்க்கையின் இடர்பாடுகளை எதிர்கொள்ளும் ஒரு பதின்ம இளைஞனின் கதை திரையில் விரிகிறது.
கள்ளக்கடத்தல் தான் அந்தக் கிராமத்தின் தொழில். தென் ஈரானின் ஒரு குக்கிராமத்தில் தான் பார்த்த ஒரு சமூகத்தின் வாழ்க்கையை ஒரு எளிய கிராமத்து இளைஞனின் கதையை எந்தவித தர்க்கவிவாதங்களுக்குட்படுத்தாமல், அதன் இயல்பினை மட்டுமே சொல்கிறார், இயக்குநர். வாழ்க்கைக்கு அத்தியாவசியமாகிவிட்ட டெலிவிஷன், மைக்ரோவேவ் ஓவன் போன்ற பொருட்களை – சமூக சீரழிவின் காரணிகளான போதை வஸ்துக்கள் அல்ல - கடத்தி வந்து, அதை நகரத்தின் சந்தைகளில் தரகு முதலாளிகள் மூலம் விற்பது தான் கிராமத்தினரின் தொழில். ஆண்கள் கடலில் இயங்குகின்றனர். தரை வந்து சேர்ந்ததும், அந்தப் பொருட்களை உடன் அள்ளிச் சென்று பதுக்கி, பின்னர் தரகர்கள் மூலமாக நகரம் நோக்கி அனுப்பி வைப்பது பெண்களுடைய பங்களிப்பு. போலிஸ் இயங்குகிறது எவரையும் பிடித்துக் கொள்ளாமல் விரட்டிக் கொண்டிருப்பதன் மூலமே தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் உள்ளூர் போலிஸ், பொருட்களை எடுத்துச் செல்ல இயலாத பெண்ணின் வீட்டு வாசலில் போட்டுவிட்டு, சுவடில்லாமல் மறைந்து கொள்கிறது.
முத்து என்ற பதின்ம இளைஞன் கடத்தல்காரர்களில் ஒருவன். அக்கரைக்குத் தப்பிச் செல்ல முயலும் சில மனிதர்களை ஏற்றிச் சென்ற தந்தை திரும்பவில்லை. கர்ப்பிணியான தாய், திருமணத்திற்காகக் காத்து நிற்கும் அக்கா என இருவரையும் காக்கும் பணியுடன், பொருளீட்டும் நிர்ப்பந்தங்களும் சேர, கடத்தல் ஒன்று தான் தொழில். தொழிலுக்கு அப்பாற்பட்டு அக்கரையிலிருக்கும் நண்பனின் உதவியுடன், அக்கரையில் தந்தையைப் பற்றிய செய்திகளையும் தேடிக் கொண்டே அக்காவிற்குப் குளிர் தாங்கும் தோலினால் செய்யப்பட்ட ஒரு கோட் பரிசாகத் தர கூடுதலாக பணம் சேர்க்க முத்து குளிக்கிறான். தேவைகளிலிருந்தாலும், பிறர் பொருளை அபகரிப்பதில்லையென்ற நல்லமனதும் உடையவன். பணத்தைத் தவறவிட்டுச் செல்லும் உள்ளூர் போலிஸ்காரனின் பணத்தையெடுத்துத் திருப்பித் தந்து விடும் குணங்களும் உண்டு.
கடலில் காணமல் போனவரைப் பற்றி முத்து தேடிக்கொண்டிருக்க, களங்கமில்ல மனதுடன் பட்டுப்போன மரத்திற்கு நீர் வார்த்து துளிர்க்க வைப்பதன் மூலம், காணாமற்போனவன் திரும்பிவிடுவான் என்ற நம்பிக்கையைக் கேட்டு, கிராமத்தின் வெளியே பசுமையற்ற மலையடிவாரத்தில் மரத்திற்கு நீர் இறைத்து பிரார்த்திக்கிறாள் அக்கா. மௌனமாக இறைவனைத் தொழுது வேண்டிக் கொண்டிருக்கிறாள் தாய். இவர்களின் பிரார்த்தனை நிறைவேறியதா என்பதே கதையின் முடிவு. முடிவிலிருந்து தான் திரப்படமே தொடங்குகிறது. படகில் அநாதவரான நிலையில் முத்து இறந்து கிடப்பதிலிருந்து தொடங்கி, தாய் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் வேளையிலே, முத்து படகில் இறந்து கிடப்பதான காட்சியுடனனும் காணாமல் போனவர்கள் திரும்ப வருகிறார்களாவென அந்தப் பெண் கடல் கரையில் காத்துக் கிடப்பதுடன் படம் நிறைவடைகிறது.
படம் முடிந்ததும், இயக்குநர் இரண்டு நிமிடங்கள் பேசினார். இம்மாதிரியான கிராமம் ஒன்றில் தான் பார்த்த பின்னணியில், கதை அமைத்ததாகச் சொன்னார். 7 வரை எண் என்று தலைப்பு வைத்தது எதனால் என்று ஒருவர் கேட்க, 7 என்ற எண்ணின் மீது உலகம் ஒரு நம்பிக்கைக் கொண்டிருக்கிறது அதனாலே தந்தை காணாமற் போன 7வது நாளிலே மகன் இறப்பதாக கதை அமைத்தேன் – நம்பிக்கைகள் குறித்த ஒரு உணர்வு மட்டுமே அது என்றார்.
‘குற்ற உணர்வுகள்’ கிராமத்தினரிடையே இல்லையென்று சொல்லும் கதையில், ‘களங்கமில்லா’ ஒரு அப்பாவிப் பெண்ணின் பிரார்த்தனைகள் ஏதோ ஒரு வகையில் நிறைவேறுகிறது என்று சொல்வதன் மூலம், குற்றச்செயல்களை, களங்கமின்மையென்பதன் மூலம் துடைத்தெறிந்திடலாம் என்ற கருத்தை முன் வைக்கிறீர்களா என நான் கேட்ட பொழுது, ‘நான் அவ்வாறான தர்க்கங்களைச் செய்யவில்லை. – மாறாக நீங்கள் தான் அது குறித்து விவாதிக்க வேண்டும். ஒரு சமூக இயக்கத்தை எதை கொண்டு, எடை போடுவது என்பதை அந்த சமூகமே செய்ய வேண்டும். நான் பார்த்தவற்றை பார்த்தவாறே சொல்லியிருக்கிறேன். அவ்வளவு தான்’ என்றார்.
ஒரு செயலை குற்றம் என்று யார் தீர்மானிப்பது? ஒரு நாட்டின் அரச சட்டங்களா? அல்லது ஒரு சமூகம் தன்னைப் பாதிக்காத எந்த ஒரு செயலையும் அனுமதிப்பதை அவர்கள் விருப்பத்திற்கே விட்டுவிடுவதா? இது எப்போதுமே தர்க்கத்திற்குட்பட்டே இயங்குகிற விஷயம் தான். குற்றம் என்பதுவும் இல்லையென்பதுவும், அந்த சமூகத்தின் பார்வையிலே தான் இருக்கிறது.
தந்தையின் மீட்புக்காகப் பட்டுப் போன மரத்தை நீர் ஊற்றி துளிர்க்கச் செய்யும் அந்தப் பெண் களங்கமில்லாதவளா? தோற்றத்திலே களங்கமற்ற அந்த முகம் வசீகரிக்கத் தான் செய்கிறது. தன் தம்பியைத் தேடி, கடற்கரைக்குச் செல்லும் அந்த யுவதி, போலிஸ் விரட்டும் பொழுது, சில மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு, ஓடி, முடியாமல் விட்டு விட்டுப் போகிறாள். எந்தப் பெண் என்று சொல்லப்படாமலே, ஒரு பெண்ணைக் குறித்த அக்கறை கொண்டவனாக சித்தரிக்கப்பட்ட அந்தப் போலிஸ் இளைஞன், அந்த மூட்டைகளை அவள் வீட்டு வாசலில் கொண்டு வந்து போட்டுவிட்டுப் போகிறான். (ஒரு மெல்லிய காதலின் ஒரு இழையைப் பிரியைவிட்டு நீக்கிக் காட்டிய கதை அதற்கு மேலாக அந்தத் தளத்தில் பயணிக்கவில்லை.)
கடற்பாறையின் முகட்டில், காணமற்போனவ தந்தை தம்பி வருகைக்காக காத்திருப்பவளை நிழலாகக் காண்கிறான் அந்தப் போலிஸ். அவள் களங்கமற்றவளா? சட்டத்தை மீறிய ஒரு செயலை செய்யும் எண்ணம் கொண்டு தான் அவளும் தம்பியுடன் மூட்டைகளை அள்ளிக் கொண்டு ஓடினாள்! அதை செய்து முடிக்காத இயலாமையினால் பாதியில் போட்டுவிட்டுப் போய்விட்டதினால், அவள் களங்கமற்றவளாக தொடர்கிறாளா?
அப்படித்தான் கதை சொல்கிறது. அவளது பிரார்த்தனைகளின் மூலம் காணமற் போனவர்கள் வந்துவிடவில்லை. ஆனால், ஒரு புது உயிர் ஒன்று வந்து இணைந்து கொள்கிறது. ஒரு வகையில் அதுவே அவளது பிரார்த்தனைக்கான விடையும் கூட. நியாய அநியாய தர்க்கங்களுக்குள் தான் போகவில்லையென்று சொன்னாலும், அந்தப் பெண்ணின் மீதான ஒரு பரிவான பார்வையையே இயக்குநர் முன்வைப்பதிலிருந்து, தான் அச்சமூகத்தை ஒரு குற்ற செயலாகப்பார்க்கவில்லையென்ற பரிவைக் கொண்டிருப்பதாகவேத் தோன்றுகிறது.
இதை எல்லோரும் விவாதிக்கக் கூடும் – குற்றம் என்பது என்ன? அதை தீர்மானிப்பது யார் என்று?
ஆரம்ப காட்சிகளின் விறுவிறுப்பு அலாதியானது. கடல் மட்டத்தில், படகுகள் விரையும் காட்சிகளின் வேகம், எந்த ஹாலிவுட் படங்களுக்கும் குறைந்தது அல்ல. திரைப்படத்தைப் பார்க்க விரும்புபவர்கள், முதல் பத்து நிமிடங்களைத் தவற விடக்கூடாது. ‘Action’ என்பது வர்த்தக சினிமாக்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பதைப் பொய்யாக்கி, ஒரு கதைக்குத் தேவையென்றால், எந்தப் படங்களிலுமே விறுவிறுப்பைக் கொண்டு வர முடியும் என்பதைச் சொல்லும் விதத்தில், நகர்கிறது காமிராவுடன்.
துபாயிலிருப்பவர்கள் பார்க்கலாம் – மீண்டும் ஒரு முறை திரையிடுகின்றனர் திங்கள் இரவு.
ARAM BASH VA TA HAFT BESHMAR (BE CALM AND COUNT TO SEVEN) Box Office
Mon, Dec 15 2008, 12:30 MoE 6
Iran/2008/Farsi dialogue with English subtitles/Colour/DigiBeta/89 mins
Middle East Premiere
Interests: Drama, Experimental
Cast & Credits
Director: Ramtin Lavafipour
Producer: Ramtin Lavafipour
Scriptwriter: Ramtin Lavafipour
Cinematographer: Reza Teymouri
Composer: Daryoush Namdar Zangeneh
Editor: Ramtin Lavafipour
Main Cast: Ali Molagholi , Fatemah Sangarzadeh , Hedayat Hashemi , Manhaz Talandeh , Omid Abdollahi
Synopsis
Motu is one of the dozens of young men, zooming covertly about the coastline by night, retrieving stashes of contraband goods, to be brought back to the village and hidden by the womenfolk, all of whom take pride in constantly outwitting the exasperated local police. But for Motu, pressures are beginning to bite - his father went missing with a cargo of illegal migrants and his pregnant wife and daughter are now Motu's responsibility, while his daring night-time forays grow increasingly riskier... This debut feature by director Ramtin Lavafipour, handles its social realist agenda admirably, providing sequences of real strength and narrative agility, amidst taut tension.
Contains: Adult References or Themes (12+)
Sunday, December 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
pls visit and give your feedback.
http://peacetrain1.blogspot.com/
Post a Comment