Born Into Brothels - English / Hindi
விளக்கைச் சுற்றும் விட்டில் பூச்சிகளுடன் முதல் ஷாட் ஆரம்பிக்கிறது. அடர்ந்த சிவப்பு வண்ணத்தில் தொடர்ந்த காட்சிகள் விரிகின்றன. பாலியியல் தொழிலாளி ஒருவரின் பார்வையில் ஒரு குறுகலான சந்து. காத்திருக்கிறார்கள் வாடிக்கையாளர்களுக்காக. தங்களால் இயன்ற அளவிற்கு அழகு படுத்திக் கொண்டு. புன்னகைக்கிறார்கள். சட்டையைப் பிடித்து இழுக்கிறார்கள். மதுபானங்கள் விளம்புகிறார்கள். பணம் எண்ணப்படுகிறது. வயதான பெண்கள் கஞ்சா புகைக்கிறார்கள். போதையில் ஆண்கள். தெருவில் உழலும் குழந்தைகள். இறுதியில் குப்பைத் தொட்டியில் பெருச்சாளிகள்.
சோனாகச்சி என்ற கல்கத்தாவின் பிரபலமான பாலியியல் தொழிற்பேட்டையின் வீதி ஒன்றில் தான் மேலே காட்டப்பட்ட காட்சிகள். பாலியியல் தொழிற்பேட்டையின் வாழ்க்கையைப் படம் பிடிக்க விரும்பி வந்த பிரிட்டிஷ் பெண் ஸனா பிரிஸ்கி என்ற பத்திரிக்கையாளர். சோனா கச்சியின் இறுக்கமான கட்டமைப்பைப் பிளந்து, ஊடுருவி எதையும் காண முடியவில்லை. அது ஒரு தனி உலகம். ஒரு பெரு வட்டத்திற்குள் இயங்கும் சிறுவட்டம். பெருவட்டத்திற்குள் இருப்பது அதற்கு அவசியம். ஆனால், அதனுடன் கலந்து விடுவதற்கு வழியில்லை. வெளியிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. அதிலும் ‘அந்த சில மணித்துளிகளுக்கு’ மட்டுமே. எதையுமே புகைப்படம் எடுக்க முடியாது.
இந்தத் தெருவில் தங்கிக் கொண்டு, பாலியியல் தொழிலாளர்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்ய இயலாத, ஸனா, மாறாக, அந்தத் தெருவில், பாலியியல் தொழிலாளிகளின் குழந்தைகளுடன் நெருங்கிப் பழகுகிறார். அந்தக் குழந்தைகளுக்கு எதுவும் புரியவில்லை. யாரிந்தப் பெண், எதற்காக வந்திருக்கிறார் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனாலும், ஒட்டிக் கொள்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு ஒரு புகைப்படக் கருவியின் வழியாக எப்படிப் பார்ப்பது, காட்சிகளை எப்படி தேர்வு செய்வது என்பது போன்ற புகைப்படக் கலையின் அடிப்படைகளைக் கற்றுத் தர ஆரம்பிக்கிறார். ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகைப் படம் எடுத்துக் கொள்வதுவும், பின்னர் அதை எவ்வாறு சரியாகச் செய்திருக்கிறார்கள் அல்லது என்ன தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன என்று விமர்சிப்பதுவும், தவறுகளை திருத்திக் கொள்வது எவ்வாறு என கற்றுத் தருகிறார். பின்னர் ஒவ்வொருவருக்கும் ஒரு புகைப்பட கருவியைத் தருகிறார்.
காட்சிகளாகத் தகும் அனைத்தையும் புகைப்படம் எடுக்கத் தூண்டுகிறார். ஒரு புகைப்படவியலாளராக, பத்திரிக்கையாளாராக உள்ளே நுழைய முடியாத அவருக்கு, இந்தக் குழந்தைகள் வழி அமைத்துத் தருகிறார்கள். பாலியியல் தொழிலாளர்களுக்கும் நம்பிக்கைப் பிறக்கிறது. அவரை முதலில் தயக்கத்துடனும், பின்னர் தாராளமாகவும் அனுமதிக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது வாழ்க்கை பதிவு பெறுகிறது. அந்த குழந்தைகளே சோனாகச்சியின் வாழ்க்கை அனுபவங்களைப் பிட்டு பிட்டு வைக்கிறார்கள். தங்கள் வீட்டில் எவ்வாறு தொழில் நடக்கிறது என்பது முதற்கொண்டு.
தான் வந்த நோக்கத்திலிருந்து, பாலியியல் தொழிலாளர்களைப் பற்றிய பதிவை விட, அந்தக் குழந்தைகளின் மீதான பரிவாக பதிவு செய்வதில் கவனம் கொள்கிறார், ஸனா. புகைப்பட வகுப்புகள் மெருகேறிக் கொண்டிருக்கின்றன. நிறையப் புகைப்படம் எடுத்துத் தள்ளுகிறார்கள். வெவ்வேறு கோணங்களில் சோனாகச்சி வாழ்க்கை பதிவாகிறது. அந்த வாழ்க்கையைப் பற்றி வயதுக்கு வந்த பாலியியல் தொழிலாளர்கள் சொல்லவில்லை. மாறாக அந்தக் குழந்தைகள் சொல்கிறார்கள். உடைக்க முடியாத இரும்புக் கோட்டையாக மர்மமான பிரதேசமாக விளங்கிய அந்த சோனாகச்சி என்ற கோட்டையை இளக்கி, தன்னை அதனுள் அனுமதிக்க வழி வகுத்த அந்தக் குழந்தைகளுக்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற ஆவல் இறுதியாக எடுத்த வடிவம் தான் - Born Into the Brothels என்ற டாக்குமெண்டரி.
தங்களைச் சுற்றி இருக்கும் உலகைப் பற்றி எதார்த்தமாக பேசும் குழந்தைகள், அத்துடன் தங்கள் ஆசைகளையும், வாழ்க்கையைப் பற்றிய தங்கள் புரிதலையும் கூடவே பேசுகிறார்கள். பெண் குழந்தையை விற்க முயன்ற தந்தை, விரைவிலேயே பாலியியல் தொழிலாளியாக மாற்றப்பட போகும் சிறுமி என அந்தக் குழந்தைகளைச் சுற்றி ஒரு படுகுழி தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைந்து ஏதாவது செய்தாக வேண்டும். கோச்சி என்ற குழந்தையை பள்ளிவிடுதியில் சேர்ப்பதில் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் புகுந்து கொள்கிறார். இடையில், இந்தியா ஆளும் வர்க்கத்தின் சிறப்பு மிக்க ‘சிவப்பு நாடாக்களையும்’ சந்திக்கிறார். இவர்களின் வாழ்க்கையைப் பலருக்கும் எடுத்துச் சொல்லி, இந்த டாக்குமெண்டரிப் படங்களையும் திரையிட்டு, வசூல் திரட்டுகிறார். இந்தக் குழந்தைகள் எடுத்த புகைப்படங்களையும் தொகுத்து வணிக ரீதியாக பணம் திரட்ட முனைகிறார்.
இன்று அந்தக் குழந்தைகளில் சிலர் நல்ல நிலைக்கு வந்து விட்டனர். சிலர் புகைப்படக் கலைஞராகவே. ஆனால், எல்லோருக்கும் அந்த அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை. சிலரால், சோனகச்சியின் வாழ்வெல்லைகளை விட்டு, வெளியேற முடியவில்லை.
பாலியியல் தொழிலாளிகளின் வாழ்க்கைப் பதிவு என்று தொடங்கி, இத்தகைய இடங்களில் பிறந்து விடக்கூடிய குழந்தைகளின் அவல் நிலையைக் காட்டி, பின்னர் அவர்கள் வாழ்வின் ஈடேற்றத்திற்கான முயற்சி என்று பலதரப்பட்ட பாதைகளில் இந்த டாக்குமெண்டரி பயணித்தாலும், படத்தின் பின்னணி களம் பாலியியல் தொழிலாளிகளும் அவர்களது வாழ்க்கை சூழலும் எத்தகைய அவலமானது என்று சுட்டிக் காட்டுகிறது. தனி மனிதர்களின் முயற்சியினால் மட்டுமே திருத்திவிட முடிகின்ற சூழ்நிலை இல்லை. அரசின் முயற்சிகளும், உதவியும் கண்டிப்பாகத் தேவைப்படுகின்ற விஷயம் இது. ஆனால், இந்திய அரசுகள் இது குறித்து எதுவும் செய்ததாக தெரியவில்லை. வெறுமனே எய்ட்ஸ் தடுப்பு பிரச்சாரங்கள் மட்டுமே உதவப் போவதில்லை. பாலியியல் தொழில், அரசினால் அங்கீகரிக்கப்பட்டு, ஒரு தொழிலாக நடத்தப்படுவதற்குண்டான விதிமுறைகளை ஏற்படுத்தித் தந்தால் மட்டுமே, இங்கு நிலவும் சூழலை சரி செய்ய முடியும். இல்லையென்றால், சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில், இவர்களுக்குப் பாதுகாப்பாக நிற்க முனைபவர்கள் சட்ட விரோதிகளும், சுரண்டல் பேர்வழிகளுமாகத் தான் இருப்பார்கள். படத்தின் பல இடங்களில் இந்தப் பின்னணி நிழலாடுகிறது.
சில மாதங்களுக்கு முன் கல்கத்தாவின் பாலியியல் தொழிலாளிகள், தாங்கள் வருமான வரி கட்டுகிறோம் என்று அறிவித்த பொழுது, அதை மேற்கு வங்க அரசு ஏற்கவில்லை. அத்தனை தான் கம்யூனிஸ வாதிகளின் முற்போக்குத் தனம். அல்லது இந்தியாவின் ஆளும் வர்க்கத்தினரின் மனப்பாவம். இதற்கு முன்னர் கூட, மீரா நாயரின் ‘ஸலாம் பாம்பே’ என்ற திரைப்படம் ஒன்று வந்தது. சிவப்புப் பகுதியில் ‘சாயா’ எடுத்துச் செல்லும் அப்பாவி சிறுவர்களின் பின்புலத்தை வைத்து இயக்கப்பட்ட படம். அப்பொழுது, மிகத் தீவிரமாகப் பேசப்பட்ட படம். தொடர்ந்து மறக்கப்பட்டது. இப்பொழுது, இந்த டாக்குமெண்டரி. வந்த பொழுது, சிறிது பேசப்பட்டதாக நினைவு. இப்பொழுது எத்தனை பேருக்கு அது ஞாபகத்தில் இருக்கும் என்று தெரியவில்லை.
ஆனால், அவ்வப்பொழுது, யாராவது தொடர்ந்து இவ்வாறு குட்டிக் கொண்டிருந்தாலாவது கொஞ்சம் விழிப்புணர்ச்சி வருகிறதா எனப் பார்க்கலாம்.
ஆனால், அவ்வப்பொழுது, யாராவது தொடர்ந்து இவ்வாறு குட்டிக் கொண்டிருந்தாலாவது கொஞ்சம் விழிப்புணர்ச்சி வருகிறதா எனப் பார்க்கலாம்.
அரசிற்கு.
6 comments:
I have seen this movie some time back . Nice Movie with lot of fun side of kids even though they are in largest red light area .
Hope one day in this world there is no brothels .
ஒவ்வொரு தடவையும், ஹாலிவூட் வீடியோ போகும்போது, இந்த படத்தைப் பாக்கனும்னு நினைப்பேன்.. அடுத்த தடவை போகும்போது கண்டிப்பா எடுத்துடறேன்..
வாங்க நண்பன். உங்க பதிவுகளைத் திரும்பவும் பார்ப்பதில் மகிழ்ச்சி.
இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்னமும் பார்க்கக் கிடைக்கவில்லை.
நான் அடிக்கடி நினைப்பது "இந்த உலகம் குழந்தைகளுக்கானது" என்று. ஆனால் பெரியவர்களின் கைகளில் அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பூட்டிய உலகத்துக்குள்ளே உள்ள குழந்தைகளின் நிலை? கொடுமை. கொடுமை.எல்லாரும் தப்பிக்க முடியவில்லை. ஒருசில குழந்தைகளாவது தப்பித்தது குறித்து மகிழ்ச்சி.
ஏன் தெரியுமா அரசாங்கங்கள் வரியை மறுக்கின்றன...ஒருவேளை வரி வாங்கி விட்டால்..அவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே....அதுவுமில்லாமல் அங்கீகாரம் கொடுத்தது போலவும் ஆகிவிடும் அல்லவா.
ரவீந்த்ரன் சின்னசாமி, தஞ்சாவூர்க்காரன், ஜி.ராகவன் - மிக்க நன்றி.
ரவீந்த்ரன்,
இந்த உலகில் ஒரு நாளும் பாலியியல் தொழிலை ஒழிக்க முடியாது என்றே கருதுகிறேன். அது இருக்கும் வரையிலும், அதற்கான விடுதிகள் இருக்கத் தான் செய்யும்.
தஞ்சாவூர்க்காரன்,
கண்டிப்பாகப் பாருங்கள்.
ராகவன்,
என் பதிவுகளைத் திரும்பவும் நீங்கள் பார்ப்பதில் மகிழ்ச்சியே. கவிதைகளை நீங்கள் பதிவாகக் கருதவில்லை என்று அறிகிறேன். இல்லையா?
'இந்தத் தொழிலுக்கு' அங்கீகாரம் கொடுக்க வேண்டியது அவசியமல்ல. மக்களிடையே (ஆண்களிடையே ) இதற்கு வரவேற்பு இருக்கத் தான் செய்கிறது. அரசு செய்வது பம்மாத்து. அரசின் பணி நீதி உபதேசம் செய்வதல்ல. அதன் தொழில், அரசு நடத்துவது மட்டுமே.
இதை என்று நம் அரசியல் வாதிகள் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.
என்ன செய்வது?
நண்பன்,
அருமையான படம் இது!
விபச்சார உலகமும், விபச்சாரிகளும்(கவனியுங்கள்! விபச்சாரன்கள் சீனிலேயே இல்லை! ) அவர்களது இருண்ட, வறண்ட, கரடு முரடான வாழ்க்கையையும் அற்புதமாக படமெடுக்கப்பட்டிருக்கும் ஒரு முகத்திலறையும் நிஜம் இந்த படம்.
உலகின் ஒதுக்கி வைக்கப்பட்ட பகுதிகளையும், வெளியுலகுக்கு நல்லவர்கள் வெறுத்து ஒதுக்கும் உலகமாகவும் இருக்கும் விபச்சார நகரத்தை அதன் அருவெறுப்பு பொங்க, துயரம் தாக்க நெகட்டிவ் உணர்வுகளாகவே காட்டியிருக்க முடியும். இருந்தும் படத்தின் இயக்குனர் நல்லனவற்றை மட்டுமே முன்னிருத்தி அல்லனவற்றை பின்புலமாக காட்டுவதன் மூலமாகவே, நேரடியாகக் காட்டியிருப்பதன் வலியை விட 1000 மடங்கு வலியை உணரவைத்திருப்பது படத்தின் வெற்றி.
அந்த சின்னஞ்சிறுசுகளின் சிரிப்பினிலும், விளையாட்டிலும், சிறுபிள்ளை சண்டைகளிலும் பின்னால் இருக்கும் சபிக்கப்பட்ட வாழ்க்கையை, அதற்கு மாற்றாக நல்லதொரு உலகம் வெளியே இருக்கிறது என உணரக்கூட இயலாத அளவு அழுத்தப்பட்டு உறைந்திருக்கும் நிலையை வேறு எப்படி எடுத்திருந்தாலும் இவ்வளவு அழுத்தமாக உணர்த்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது.
எனக்கு அந்த தொழில்முறை பெண்களும் தவறாகத் தெரியவில்லை! வாடிக்கையாளர்களும் குற்றம் சொல்லமுடியவில்லை! அதெல்லாம் அவர்களாகவே தேர்ந்தெடுத்தது எனவே வைத்துக்கொண்டாலும், அவர்களுக்கு பிறந்த ஒரு காரணத்திற்காகவே அந்த குழந்தைகளுக்கு குறைந்த பட்ச நல்லதொரு உலகமான மூன்றுவேளை உணவும், படிப்பும், கைக்கெட்டாத தொலைவில் இருக்கும் படியாக அமைந்த சமுதாயத்தில் யாரை குற்றம் சொலவது? :(
படம் முடிகையில் எனக்கு மகிழ்ச்சியே எஞ்சி நின்றது! பூஜா இன்னும் படிப்பை தொடர்கிறாள் என்ற செய்தியே அது. வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விடுகிறதா என்ன? கிடைத்தவரையில் சந்தோசம்தான்!
இப்படம் அழுத்தமாக உணர்த்தும் சேதி என்னவெனில், பிறந்த குலத்துக்கும், திறமைக்கும், உன்னத ரசனைக்கும் சம்பந்தமேயில்லை என்பதனை அந்த குழந்தைகளின் புகைப்படக்கலையின் மூலம் உணர்த்துவதே!
உணர்களுடன் கூடிய உங்கள் பதிவுக்கு நன்றிகள்!
மிக நீண்ட விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, இளவஞ்சி. நான் எழுதியவற்றிற்கு மேலும் வலு சேர்க்கும் வண்ணமாக உங்கள் பின்னூட்டம் அமைந்தது.
மிக அவலமாக, வக்கிர உணர்வோடு இப்பிரச்சினையை அணுகாமல், மிக நேர்மையுடனும், உன்னத எண்ணங்களுடனும், அணுகியமையே, இப்படத்தின் இயக்குநரின் வெற்றி.
மேலும் கதை புனைவாக இல்லாமல், உண்மை நிலவரங்களைப் படம் பிடித்து, அக்குழந்தைகளுக்குத் தேவையான உதவிகளை இவ்வுலகிற்கு எடுத்துரைத்ததே, இந்த டாக்குமெண்டரி படம் இக்குழந்தைகளுக்கு செய்த மிகப் பெரிய உதவி.
இவள் நல்லவள், அவள் கெட்டவள், இவன் அயோக்கியன் என்றெல்லாம் characterization செய்யாமல், ஒவ்வொருவரையும் அவரவர் சுயரூபத்திலே நடமாடவிட்டதினாலே தான், இந்தப் படத்தினால் இத்தனை உணர்வுகளையும் வெளிக் கொண்டு வர முடிந்தது.
வெகுஜன ஊடகத்தில் மூழ்கிக் கிடக்கும் நம் மக்களுக்கு இத்தகையத் திரை அனுபவங்களை எப்பொழுதும் பெற முடியாது. என்று மக்கள் இத்தகைய இயல்பான திரைப்படங்களைப் பார்த்து தங்களைப் பாதித்து உணர்வு பெருக்கெடுக்க வைக்கும் அனுபவங்களைப் பெற முயல்கிறார்களோ, அன்று தான் நம் கலைத்துறையும் உருப்படும்.
Post a Comment