Tuesday, July 10, 2007

Monsieur Ibrahim -French

Monsieur Ibrahim and the flowers of Qur'an

என்ற படத்தின் கதையை ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால் - மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட, அனைத்து தடைகளையும் மீறி, அன்பும் உறவும் உண்டாக முடியும் என்பது தான். இந்த ஒற்றை வரியைக் கொண்டு ஒரு முழு கதையையும் பின்னியிருக்கிறார்கள். வயதான பெரியவருக்கும், ஒரு சிறுவனுக்குமிடையில் எழும் நட்பையும், விளையும் உறவுகளையும் நகைச்சுவை இழையோட, யதார்த்தமாக பேசும் இந்தப்படம் வெனீஸ் பட விழாவில், பார்வையாளர் விருது பெற்றதில் ஆச்சரியமில்லை.

படத்தின் இரு முக்கிய பாத்திரங்களுமே முரண்களின் மீது அமைக்கப்பட்டிருக்கிறது. எப்பொழுதுமே இரு முரண்களுக்கிடையில் நிகழும் உறவுகள் எல்லோரையும் ஈர்ப்பதில் எளிதாக வெற்றியடையும். இந்தப் படத்திலும் அந்த உத்தியைத் தான் கையாண்டிருக்கிறார்கள்.

மோஸஸ் என்ற சிறுவன், இப்ராஹிம் என்ற முஸ்லிம் பெரியவர் இருவருமே உறவினர்கள் அல்ல. அத்துடன், பொதுப்புத்தியில், இருவரும் இரு வேறு துருவங்களைச் சார்ந்தவர்கள். பெரியவர் முஸ்லிம். சிறுவன் யூதன். யூத முஸ்லிம் முரண்களைச் சொல்லித் தெரிவதில்லை. ஆனால், படம் யூத முஸ்லிம் முரண்பாடுகளைப் பற்றிப் பேசவில்லை. இன்னமும் சொல்லப்போனால், இரு பாத்திரங்களுமே தங்களை மதம் சார்ந்து வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் மதங்களைப்பற்றிய கேள்விகள் எழுப்பப்படுகின்றன. படத்தின் இயக்குநர் சொல்வது, பெரியவர், சிறுவன் என்பது தான் கதை கட்டமைப்பே தவிர, யூத முஸ்லிம் பெயர்கள் இயல்பாக நிகழ்ந்ததாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். They just happened to be Jew and Muslim.



இரண்டாவது முரணாக அமைவது - பாத்திரங்களின் குணங்கள். எல்லோரையும் நேசிக்கும் இயல்பை அனுபவத்தின் மூலம் பெறுகிறார் முஸ்லிம் பெரியவர். எதையும் நிராசையுடனும், அவநம்பிக்கையுடனும் நோக்கும் சிறுவனிடத்தில் எப்பொழுதும் ஒரு கோபம் மிளிர்கிறது. மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் தந்தை, பிரிந்து சென்ற தாய், உன்னை விட உன் சகோதரன் புத்திசாலி என்று குத்திக் கொண்டேயிருக்கும் தந்தையின் சுடுசொற்கள், தன் அன்பை - காதலை நிராகரிக்கும் சக யூத சிறுமி என வாழ்க்கையின் அனைத்து திசைகளிலும் ஏமாற்றத்தையே சந்திக்கும் சிறுவன், இயல்பாக எல்லாவற்றின் மீதும் வெறுப்பு கொள்கிறான். முஸ்லிம் தாத்தாவோ நேர் எதிர். வானொலி கேட்டு நேரம் கடத்துவது, தெரு விபச்சாரிகளை ஒரு கண்சிமிட்டலோடு ரசிப்பது, கடைக்குள் எதேச்சையாகப் புகுந்து நீர் கேட்கும் சினிமா நடிகையைக் கண்டு, பரவச பதட்டமடைவது, தனக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருப்பது, ஏழ்மையினால் திருடும் சிறுவனைக் கண்டு கொள்ளாமல் இருப்பது, பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அந்த சிறுவனிடத்தில், 'திருடுவதாக இருந்தால், என்னுடைய கடையிலே நீ திருடிக் கொள்' என்று தட்டிக் கொடுப்பது என பாசமிக்க மனிதராக பெரியவர் இருக்கிறார்.

இவர்கள் இருவருக்குமிடையில், உறவு வளர அல்லது பகைமை துளிர் விட பல காரணங்கள் இருந்திருக்கலாம். முஸ்லிம் பெரியவரை அரபி என நினைத்துக் கொண்டு, அவரிடத்தில் திருடுவது ஒன்றும் தவறில்லை என்று சிறுவனின் வெறுப்பு வெளிப்படுகிறது. சிறுவனை யூதனாக கண்டிருந்தால், அவனைத் தண்டிக்க முஸ்லிம் பெரியவர் முயற்சித்திருந்தால், அதை யாரும் குறை கூற முடியாது. ஆனால், பொறுமையாக சிறுவனுக்குப் புரிய வைக்கிறார். தான் ஒரு முஸ்லிம். எல்லா முஸ்லிம்களும் அரபிகளல்ல என்று. உறவு வளர அடிப்படையான காரணமாக, இருவருமே தாங்கள் தங்கி இருக்கும் நாட்டிற்கு அந்நியர் என்பதுவும், இருவருமே ஒரு வகையில் அநாதை வாழ்க்கையைத் தான் வாழ்கிறோம் என்ற புரிதலும் அமைகின்றன.

கதை வெகு எளிதானது. விபச்சாரிகள் நடமாடும் தெருவில், கடை வைத்திருக்கும் முஸ்லிம் பெரியவரின் கடையின் வாடிக்கையாளர் சிறுவன். தாய் பிரிந்து போன பின், கடைக்குச் சென்று வருவது அவனது பணி. அத்துடன் சமையலும். படிப்பிற்கு நேரமில்லை. அவனுடைய பிறந்த நாளைக் கூட மறந்து விடும் அவனது தந்தை எப்போழுதும் மன அழுத்தத்தில் உழல்பவர். அவனது சகோதரனை சிலாகித்தும், இவனை மட்டம் தட்டியும் பேசிக் கொண்டே இருப்பவர். அலுவலகம் விட்டு வந்ததும், மகன் சமைத்து வைத்திருப்பதை உண்டு விட்டு, இருக்கையில் முடங்கிக் கொண்டு எதையாவது படித்து நேரத்தைப் போக்கிக் கொண்டிருப்பவர். ஒரு கட்டத்தில், வேலையை இழந்து விட்டு, கொஞ்சம் பணத்தையும், உதவக் கூடிய நபர்கள் என்று ஒரு சில தொலைபேசி எண்களையும் எழுதி வைத்து விட்டு, வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்.

சிறுவன், கடையின் உரிமையாளரான, பெரியவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குகிறான். அவருடைய வாழ்க்கையைக் குறித்த யதார்த்தமான அணுகுமுறை அவனை வெகுவாக ஈர்க்கிறது. தந்தை ஓடிய பின், ஒரு புதுவித சுதந்திரத்தை அனுபவிக்கும் அவன் தந்தை சேமித்து வைத்த புத்தகங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விற்று பணம் சம்பாதிக்கிறான். தெரு விபச்சாரிகளிடம் அந்த பணத்தைக் கொண்டு போய் வருகிறான். தான் வளர்ந்து விட்டோம் என்ற கனவை வளர்த்துக் கொள்ளத் தான் இந்த வேலை. இதற்குள் ஓடிப்போன தந்தை, ரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார். இப்பொழுது அவன் உண்மையிலேயே அநாதையாகி விடுகிறான். பிரிந்து சென்ற தாய் வருகிறாள். சுவர்களுக்கு 'பெயிண்ட்' அடிக்கும் வேலை செய்து கொண்டிருந்த அவன், தாயிடமே பொய் சொல்கிறான். மோஸஸ் தன் சகோதரன் பாலைத் (Paulie) தேடி எங்கோ போய்விட்டான் என்று. தன் பெயர் மோமோ என்கிறான். இந்தப் பெயர் பெரியவர் வைத்தது. முகமது என்ற பெயரின் மரூஉ தான் மோமோ. தனக்கு மோஸஸ் என்ற ஒரு பையன் தான் என்று கூறிவிட்டுப் போய்விடுகிறாள் தாய். தன் தந்தை தன்னை இல்லாத ஒருவனைக் கொண்டு மட்டம் தட்டியிருக்கிறார் இத்தனை நாட்களும் என்ற அறிதலில் இன்னமும் கோபம் அதிகமாகிறது. தன்னை நேசிப்பதை விட, வெறுக்க பல காரணங்கள் இருந்தும் அதையெல்லாம் விட்டு விட்டு, தன்னை ஒரு மனிதனாக மதித்து நடத்தும் அந்தப் பெரியவரின் மீதான மதிப்பு பல மடங்கு உயர்கிறது. தன்னைத் தத்து எடுத்து கொள்கிறாயா என்று பெரியவரிடம் கேட்க, அதற்கென்ன? உனக்கு விருப்பமென்றால், நாளையே தத்து எடுத்துக் கொள்கிறேன் என கூறி மறுநாள் அதிகாரபூர்வமாக தத்து எடுத்துக் கொள்கிறார். உன் மனைவி ஆட்சேபிக்க மாட்டாளா என கேட்க, கண்டிப்பாக இல்லை, நீ அவளை சந்திக்க விரும்புகிறாயா என கேட்கிறார். சிறுவன் ஆம் என சொல்ல, உடனே பயணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். எப்படி? ஒரு புது வண்டி வாங்கி, அதை ஓட்டக் கற்றுக் கொண்டு.



யூரோப் வழியாக பயணம் போகிறார்கள். வழியில் ஒவ்வொரு ஊரைப் பற்றியும் விளக்கிக் கொண்டே வருகிறார். புராதண இடங்களுக்குப் போகிறார்கள். தேவாலயத்திற்குப் போகிறார்கள். மசூதிக்குப் போகிறார்கள். சூஃபிக்கள் தங்களை மறந்து ஆடும் வழிபாட்டுக் கூடத்திற்குப் போகிறார்கள். துருக்கியை அடைகிறார்கள். ஏழ்மையிலும் அந்த மக்கள் உற்சாகமாக வாழ்வதைப் பார்க்கிறான். தெருக் கடையில் தேநீர் அருந்துகிறார்கள். தெருவில் நடனமாடும் இளைஞர்களுடன் சேர்ந்து ஆடுகிறான். எல்லா மனிதர்களும் நேசத்திற்குரியவர்கள் என உணர்கிறான். ஏழ்மை மகிழ்ச்சிக்கு குறுக்கே நிற்பதில்லை என புரிகிறது. தன் மனதில் மண்டிக்கிடந்த வெறுப்புகள் எல்லாம் மறைய, புதியவனாக உணர்கிறான். பின்னர் துருக்கியின் பாலைவனங்களில் பயணிக்கிறார்கள். பெரியவரின் ஊர் அருகே வந்ததும், அவனை கொஞ்சம் காத்திருக்குமாறு சொல்கிறார். பலபல வருடங்களாக ஊருக்கே வந்திராத அவர், ஊரின் நிலைமை என்னவென்று தெரிந்து கொண்டு திருப்பி வந்து அழைத்துக் கொள்கிறேன் என்கிறார். மோஸஸ் ஊருக்கு வெளியே தெருவில் நிற்கிறான். கிராமத்து சிறுவர்கள் அவனிடம் பேசுகிறார்கள். மொழி புரியவில்லை. என்றாலும் கையில் இருக்கும் புகைப்படக் கருவியைக் காட்டி காட்டிப் பேசுகிறார்கள். அவன் அவர்களைப் புகைப்படமெடுக்கிறான். அவன் அவர்களிடத்தில் வீட்டுக்குப் போகுமாறு சொல்லி விட்டு, வாகனம் சென்ற பாதையில் நடந்து செல்கிறான். அதற்குள் அவனைத் தேடிக் கொண்டு, கிராமத்தில் இருந்து ஒருவன் வருகிறான். வழியிலே அவர்கள் வந்த வாகனம் விபத்துக்குள்ளாகி தலைகுப்புற கிடக்கிறது. வீட்டில் தலையில் பலத்த காயத்துடன், இப்ராஹிம் படுக்கையில் கிடக்கிறார். 'என் பயணம் முடிந்து விட்டது. எல்லையற்ற பரப்பில் கலந்து கொள்ள போகிறேன். எனக்கும் மனைவி இருந்தாள். பல நாட்களுக்கு முன் இறந்து விட்டாள். என்றாலும் அவளை நான் இன்னமும் நேசிக்கிறேன். எல்லா வாழ்க்கைகளும் ஒரு முடிவிற்கு வரத் தானே செய்யவேண்டும். இதோ இதை நீ வைத்துக் கொள்' என தான் அதுவரையிலும் வாசித்துக் கொண்டிருந்த குரானையும் தன் உயிலையும் கொடுக்கிறார். அவன் உயிலை வாசிக்கிறான் - என்னை தந்தையாக மோசஸ் ஸ்மித் தேர்ந்தெடுத்ததால், நான் வாழ்வில் கற்றுக் கொண்டதை அனைத்தையும் அவனுக்கே கொடுக்கிறேன்.

மோஸஸ் அந்தக் கடையின் உரிமையாளன். அவனையும் இப்பொழுது தெருமுனை அரபி என்றே விளிக்கிறார்கள். இப்ராஹிமால் மோமோ என்று செல்லமாக - முகம்மதுவின் சுருக்கமாக மோமோ என அழைக்கப்பட்டாலும், அவன் மோசஸாகத் தான் இருக்கிறான் சட்டப்படி. ஆனால், தெருவினருக்கு அவன் - மோமோ.

ஒரு நிறைவைத் தந்த படம். மனித நேயமிருந்தால், எந்த தடைகளையும் தாண்டி நேசிக்க முடியும் என்பதே செய்தி. முஸ்லிம்களைப் பற்றி எதிர்மறையான தகவல்களையேத் தந்து கொண்டிருக்கும் ஊடகங்களுக்கிடையில், இஸ்லாம் பற்றிய நல்ல விஷயங்களைக் கொண்டு கதையை நகர்த்துவது ஒரு மாறுதல். அதற்கு வலு சேர்க்கும் விதமாக, கதையின் வயதான பெரியவராக ஓமர் ஷெரிஃபை நடிக்க வைத்திருக்கிறார்கள். மனிதர் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், தனது மிகையற்ற நடிப்பின் மூலம், மான்ஸியர் இப்ராஹீமாகவே வாழ்ந்திருக்கிறார். இந்தப் பாத்திரம் குறித்து, பின்னர் குறிப்பிட்ட ஓமர், இந்தக் கதை தனக்காகவே அமைந்ததாக குறிப்பிட்டார். 'உண்மையான இஸ்லாம் அன்பையும், புரிந்து கொள்ளுதலையுமே தருகிறது - வன்முறையையும், தீவிரவாதத்தையும் அல்ல. இந்த திரைப்படத்தின் மூலம், தங்கள் மதங்களையும் கடந்து ஒருவரையொருவர் நேசிக்க முடியும் என்ற செய்தியை மக்களுக்கு என்னால் எடுத்துச் சொல்ல முடியும் என்ற உண்மை எனக்குப் பிடித்திருக்கிறது' என்றவரின் நடிப்பிற்குப் பரிசு கிடைத்தது - சிறந்த நடிகருக்கான சீசர் விருது.

கதையின் திரைக்கதை நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது. யாருக்காவது திரைக்கதை அமைப்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், இப்படத்தைப் பார்க்க வேண்டும். அரபி தானே, இவரை ஏமாற்றுவதில் ஒன்றும் தவறில்லையென சிந்திக்கும் சிறுவனிடத்தில் சிரித்துக் கொண்டே சொல்கிறார் - தான் அரபி அல்ல என்று. சிறுவன் அதிசயத்துடன் தன் தந்தையிடம் கேட்கிறான். மனதில் இருப்பதை ஒருவரால் அறிய முடியுமா என்று. நமக்கும் அதே கேள்வி எழுகிறது. பின்னர் - வேறொரு சந்தர்ப்பத்தில் அதற்கான விடையை இயக்குநர் தருகிறார்.

பெரியவர் சொல்கிறார் - தான் ஒரு சூஃபி என்று. அதுவும் வெளியே ஒரு சுற்று சுற்றி வரலாம் என்று நகர வீதிகளில் சுற்றி விட்டு, ஒரு கடையில் உட்கார்ந்து மது அருந்திக் கொண்டே சொல்கிறார். முஸ்லிம்கள் மது அருந்தலாமோ என ஐயப்படும் சிறுவனுக்கு விடை சொல்லும் பொழுது சொல்கிறார். சூஃபிக்கள், மனித நேயத்துடன் செயல்படுபவர்கள். மதங்களைத் தாண்டி மக்களிடம் அன்பு செலுத்துபவர்கள். வருவதை முன்கூட்டி அறிபவர்கள். தன் மரணத்தைக் கூட அந்தப் பெரியவரால் சொல்ல முடிகிறது. வாகனம் வாங்குவதற்காக கடைக்காரனுடன் பேரம் நடக்குமிடத்தில் எத்தனை நாட்களில் தருவீர்கள் என்று கேட்கையில், இரண்டு வாரம் என்கிறார் கடைக்காரன். இரண்டு வாரங்களில், நான் இறந்து விடுவேன் ஐயா என்கிறார் பெரியவர். பேரத்திற்காகப் பேசப்பட்ட வசனமாக அப்பொழுது தோன்றி, கவனத்தில் நிற்காது போய்விட்டாலும், பின்னர் இரண்டு வாரங்களில் அவர் மரணிக்கும் பொழுது, முன் நிகழ்ந்த இந்த உரையாடல் மனதில் எழுகிறது. இப்படி சூஃபிக்களின் குணங்கள் என்று மக்கள் நம்பும் ஒவ்வொன்றையும் இணைத்திருக்கிறார்கள். அதை மேலோட்டமாக படம் பார்த்தால் உணரமுடியாது. கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தால், அதுவும் சூஃபிக்களைப் பற்றிய பின்னணி தகவல்கள் இருந்தால் மட்டுமே உணர முடியும்.



துருக்கியில் சூஃபிக்கள் குழுமி, பரவசத்துடன் ஆடுமிடத்தில் சிறுவனிடத்தில் சொல்கிறார் - Throw your hand up in the air, lean your head on your shoulders, and spin around your heart in ecstasy and loose all your bearings. You will find a new way bearing life for you.

Good.

ஆனால், இயக்குநர் முன்வைக்கும் இத்தகைய ஒரு இஸ்லாத்தை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. சூஃபிக்களைப் பற்றி இஸ்லாமியர்களிடத்திலே மாற்றுக் கருத்துகள் நிறைய உண்டு. இறைவனின் புகழ் பாடி, ஆடித்திரிவதிலே வணக்கம் புரியும் சூ•பிக்கள், அரசு நடத்தி, செல்வம் சேர்த்து வாழும் முஸ்லிம்களிடத்திலிருந்து பெரிதும் மாறுபட்டவர்கள். அதனால் அவர்களை நேசிப்பதிலும், தூற்றுவதிலும் சமபங்கு முஸ்லிம்களிடத்தில் உண்டு. அதிகார மையத்திலும் அதற்கு அருகாமையிலும் இருப்பவர்களிடத்தில், சூஃபிக்களைப் பற்றிய அச்சம் உண்டு. ஏழை எளிய மக்களிடத்தில், அந்த அச்சமின்றி, மதிப்பும் மரியாதையும், அன்பும் ஏராளம் உண்டு. அதிகார மையங்கள் தேவையான பொழுதில் மட்டுமே இறங்கி வரும். அக்பர் அஜ்மீர் வருவார், அதுவும் காலணிகள் அணியாது - காரணம் புதல்வன் இல்லாமை. இது போல் தேவைகள் தான் அதிகார மையங்களை கீழிறங்கச் செய்கிறது. இத்தகைய சூஃபிக்களிடத்தில் அன்பு கொள்ளும் எளிய முஸ்லிம்களால், முஸ்லிம்களாகத் தான் வாழ முடியுமே தவிர, அரசியல் சக்தியாக மாற்றங்களைத் தேடிக் கொள்ள முடிவதில்லை. அதனால் பக்திக்காக மாத்திரமே சூஃபிக்களை ஏற்றுக் கொள்ளும் முஸ்லிம்கள், அதிகார மையம் நோக்கிய பயணத்தில், இத்தகைய நேயத்தை ஏற்றுக் கொள்வதில்லை.

படத்தின் எந்த ஒரு கட்டத்திலும், ஒரு மதம் சார்ந்த தீவிரமான கருத்துப் பிரச்சாரமில்லை. தான் நம்புபவற்றைப் பேசுகிறார்கள். அடுத்தவரை மாற்றி தங்கள் மதத்தின் பால் ஈர்த்துவிட வேண்டும் என்ற முனைப்பில்லை. Fundamentalism என்பதற்கான விளக்கம் இதுவரையிலும் முற்றிலுமாகக் கொடுக்கப்படவில்லை யாராலும். என்னைப் பொறுத்தவரை, அடுத்தவர் மீது தங்கள் கருத்தைத் திணித்து, தங்கள் நம்பிக்கையின் பால் அவர்களை ஈர்த்துவிட வேண்டும் என்ற உன்மத்தமே fundamentalism என்று சொல்ல வேண்டும். மாறாக, தாங்கள் உண்மை என நம்புபவற்றின் மீதான நம்பிக்கைகளை அடிப்படைவாதம் என்று சொல்லுவது தவறு. இதை அடிப்படைவாதம் என்பவர்கள் பொய்யர்கள். 'என்னை தந்தையாக மோசஸ் ஸ்மித் தேர்ந்தெடுத்ததால், நான் வாழ்வில் கற்றுக் கொண்டதை அனைத்தையும் அவனுக்கே கொடுக்கிறேன்.' என்று தன் உயிலில், மோஸஸ் ஸ்மித் என்ற சிறுவனை இஸ்லாமியராக மாற்ற முயற்சிக்காமல், யூதராகவே ஏற்றுக் கொண்டு மகனாக பாசமும் நேசமும் காட்டியது தான் படத்தின் வெற்றியே. மத மாற்றத்திற்கான எந்த ஒரு முயற்சியும் இன்றியே, அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்துவதே மனித நேயம் - அடிப்படைவாதத்தை வென்றெடுக்கும் வழி என்பது தான் இந்தப் படம் தரும் செய்தி.

ஒரு நேர்மையான செய்தியை முன் வைத்த படத்தை பார்வையாளர்கள் சிறந்த படமாக தேர்ந்தெடுத்தில் எந்தத் தவறுமில்லை. தேர்ந்தெடுக்காமல் போயிருந்தால் தான் மனித நேயம் தோற்று, அடிப்படைவாதம் வென்றிருக்கும்.

கட்டாயம் பாருங்கள். இயல்பான, அன்றாட வாழ்க்கையின் பகுதியாக அமைந்த உரையாடல்கள் வழியாக, நாம் உணராமலே, நம்மிடத்தில் மனித நேயத்தை காட்டுகிறது. எதுவும் பேசப்படாமல்.

அது தானே திரைப்படம்.

4 comments:

said...

இந்தப் படத்தில் நடித்த அந்த சிறுவனின் பெயர் - Pierre Boulanger.

குறிப்பிட மறந்து விட்டேன்

Anonymous said...

நெடும்பார்வைக்கு நன்றி.

கடைசியாக The 13th Warrior இலேயும் Hidalgo இலும் கருவேப்பிலையாகப் பார்த்து வெறுப்பேற்றின ஒமர் ஷெரிப் இதிலே மீண்டும் மிளிர்ந்திருக்கின்றார் என்பது உண்மையே.

said...

ப்ரென்ச் படம் புரியமா? நீங்கள் தான் கதை சொல்லி விட்டீர்களே - அதை வைத்து முயற்சி செய்யலாம். படம் துபையில் ஏதாவது தியேட்டரில் ஓடுகிறதா?
சூபியிஸத்தை பொறுத்தவரை - I have my own reservation

said...

நன்றி, அநாநி. அவரே இது குறித்து ஒரு பேட்டியில் குறிப்பட்டிருக்கிறார் - மிகச் சிறந்த இயக்குநர்களின் மிக மோசமான படங்களில் நடித்திருக்கிறேன் என்று.

பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா? (இத்தனை தாமதா கேட்கிறியா என்று கேட்காதீர்கள் - ஜிமெய்ல் மூலமாக உங்கள் பின்னூட்டம் வரவில்லை. அதனால் தான் இத்தனை தாமதம்.)


சுல்தான், நன்றி.

சூஃபியிஸத்தைப் பற்றிய மாற்றுக் கருத்துகள் உண்டு தான். இந்தப் படம் கொஞ்சம் பழசு.

காசு கொடுத்து வாங்கும் DVDகளைப் பற்றி மட்டுமே எழுதுவது என வைத்துக் கொண்டிருப்பதால், நான் எழுதும் திரைப்படங்கள் எல்லாம் எனது சொந்த சேகரிப்பில் உள்ளவை மட்டுமே. மேலும், கொஞ்சம் காலம் கடந்தால் மட்டுமே, இவை வாங்கும் படியான விலைக்கு வருகின்றன.

கால எல்லைகளையும் தாண்டி, ரசிக்க முடியும் என்பதால், இத்தகையப் படங்களைத் தேடித் தேடி வாங்குகிறேன். மற்றபடிக்கு துபாயில் வந்ததா என்பது தெரியவில்லை.

அப்புறம், பயணம் எல்லாம் சிறப்பாக முடிந்து துபாய் திரும்பி விட்டீர்களா? ஒரு முறை வீட்டுப் பக்கம் வாருங்கள் - DVD எடுத்துப் போய்ப் பார்த்து விட்டுத் திருப்பித் தாருங்கள்.

எச்சரிக்கை: குடும்பத்தோடு பார்ப்பதாக இருந்தால், முதல் பதினைந்து நிமிடங்களைத் தவிர்த்து விடுங்கள். ப்ரெஞ்ச் படங்களுக்கே உரித்தான படுக்கையறை காட்சிகள் வந்து தர்மசங்கடப்படுத்தி விடும்.

அன்புடன்
நண்பன்